

தனது ஃபர்லோ விடுப்பை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை புனே எரவாடா மத்திய சிறை அதிகாரிகள் நிராகரித்ததால் இந்தி நடிகர் சஞ்சய் தத் (55) நேற்று சிறைக்கு திரும்பினார்.
கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது குற்றம்சாட்டப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து புனே எரவாடா சிறை யில் அடைக்கப்பட்டுள்ள அவர் கடந்த டிசம்பர் 24-ம்தேதி 14 நாள் ஃபர்லோ விடுப்பில் வெளியில் வந்தார்.
இந்நிலையில், தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விடுப்பை நீட்டிக்குமாறு கடந்த டிசம்பர் 27-ம் தேதி சிறை அதிகாரிகளுக்கு தத் மனு செய்திருந்தார்.
அவர் கூறியுள்ள காரணத்தை சரிபார்ப்பதற்காக, இந்த மனு சம்பந்தப்பட்ட (பாந்த்ரா) காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக் கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தையடுத்து சிறைக்கு திரும்பினார்.
இதுகுறித்து சிறைத் துறை டிஐஜி ராஜேந்திர தமனே கூறும்போது, “சஞ்சய் தத்துக்கு ஃபர்லோ நீட்டிப்பு வழங்குவது குறித்து போலீஸார் சாதகமான அறிக்கை தரவில்லை. தத்தின் மருத்துவ சிகிச்சைக்காக ஃபர்லோவை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் அறிக்கை தந்ததால்தான் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என்றார்.
இதுகுறித்து சஞ்சய் தத் கூறும் போது, “முக்கியப் பிரமுகர் என்பதால் எனக்கு விடுப்பு வழங்கப் படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால்தான் எனக்கு ஃபர்லோ நீட்டிப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஃபர்லோ விடுப்பு என்பது எல்லா கைதிகளுக்கும் பொருந்தும். சட்டப்படிதான் நான் வெளியில் வந்தேன். முக்கியப் பிரமுகர் என்ற காரணத்தால் எனக்கு விடுப்பு வழங்கப்படவில்லை” என்றார்.
முன்னதாக, காவல் துறை அறிக்கை தர தாமதம் ஆனதால் விடுப்பு முடிந்ததையடுத்து கடந்த வியாழக்கிழமை சஞ்சய் தத் சிறைக்கு திரும்பினார்.
ஆனால், ஃபர்லோ நீட்டிப்பு மனு நிலுவையில் இருக்கும்போது, தத் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என மகாராஷ்டிர உள் துறை இணையமைச்சர் ராம் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.
பரோல், ஃபர்லோ வித்தியாசம் என்ன?
இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் ஃபர்லோ நீட்டிப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் சனிக்கிழமை மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில் பரோலில் (Parole) விடுதலை ஆவதற்கும் ஃபர்லோவில் (Furlough) விடுதலை ஆவதற்கும் உள்ள வித்தியாசம் பற்றி பலரும் பேசுகின்றனர்.
ரத்த பந்தம் மிகுந்த நெருங்கிய உறவினர்களில் யாருக்கேனும் திருமணம் அல்லது அவர்களில் யாரேனும் உயிரிழந்துவிட்டாலோ, உடல் நிலை பாதிக்கப்பட்டாலோ அதுபோன்ற அவசர காலங்களில் தண்டனை கைதி ஒருவர் தற்காலிகமாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவது ‘பரோல்’ என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு பரோலில் வெளியில் இருக்கும் நாட்கள் தண்டனை காலமாக கருதப்பட மாட்டாது. வெளியில் இருக்கும் நாட்களுக்கு இணையான நாட்களை பிறகு சிறையில் கழிக்க வேண்டும்.
தண்டனை கைதி ஒருவர் ஓராண்டில் 14 நாட்கள் விடுமுறையில் செல்ல மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை ‘ஃபர்லோ’ என குறிப்பிடுகின்றனர். குடும்ப உறுப்பினர்களுடனான பந்தத்தை தொடரவும் தண்டனை காலத்துக்குப் பிறகு கைதி ஒருவர் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு ஏற்ற மனநிலையை அவரிடம் ஏற்படுத்தவும் ஃபர்லோவில் கைதிகள் வெளியில் அனுப்பப்படுகின்றனர்.
ஃபர்லோவில் வெளியில் செல்ல உறவினர்களின் திருமணம், இறப்பு போன்ற காரணங்கள் எதுவும் தேவையில்லை. அதே நேரத்தில் அந்த கைதியின் நன்னடத்தை அவசியம். ஃபர்லோவில் வெளியில் கழிக்கும் நாட்களை மீண்டும் சிறையில் கழிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்களும் தண்டனை காலத்துடன் சேர்த்து கணக்கிடப்படும்.
ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற முறை இல்லை. தமிழகத்தில் பல கைதிகள் பரோலில் விடுதலை என அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால் பரோல் என்ற நடைமுறையே இங்கு அமலில் இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அவசர கால விடுமுறை, சாதாரண விடுமுறை என்ற அடிப்படையில் மட்டுமே தண்டனை கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீ.கண்ணதாசன். பி.புகழேந்தி ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் திருமணம், உயிரிழப்பு, உடல் நலம் பாதிப்பு போன்ற காரணங்களுக்காக ஒரு தண்டனை கைதியை அவசர கால விடுப்பில் விடுவிக்கலாம். அதிகபட்சம் 15 நாட்கள் கைதி வெளியில் செல்லலாம். இவ்வாறு அவசர கால விடுப்பு வழங்குவது பற்றி சிறை கண்காணிப்பாளர் முடிவு செய்வார்.
வீடு பழுதுபார்த்தல், மகன், மகள்களை கல்வி நிறுவனங்களில் சேர்த்தல், பிள்ளைகளுக்கான திருமண ஏற்பாடு, அறுவடை போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 30 நாட்கள் சாதாரண விடுமுறையில் செல்லலாம். இவ்வாறு விடுமுறை அளிப்பது பற்றி சரக டி.ஐ.ஜி. முடிவெடுப்பார்.விடுமுறையில் செல்லும் நாட்கள் தண்டனை காலத்தில் சேராது. அந்த நாட்களை சிறையில் இருந்து கழிக்க வேண்டும்.