

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 பைசா குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத்தில், டீசல் விலையில் மாற்றம் இல்லை.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அதன் அடிப்படையில், பெட்ரோல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு 70 பைசா குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த விலைக் குறைப்பு, உள்ளூர் வரி மற்றும் வாட் வரிக்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் அமலுக்கு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 பைசா குறைக்கப்பட்டது. அதாவது, ரூ.75.49-ல் இருந்து 74.60 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 31-ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
ஜனவரி 2013-ல் இருந்து மாதம்தோறும் 50 பைசா வீதம் டீசல் விலை ரூ.8.33 அளவில் அதிகரிக்கப்பட்டது. ஆனால், கடந்த இரு தவணைகளில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.