

மும்பையிலிருந்து வெளியாகும் அவத்நாமா நாளிதழ் சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ கார்ட்டூனை திரும்பவும் வெளியிட்டதால் இப் பத்திரிகை ஆசிரியை ஷிரின் தால்வி கைது செய்யப்பட்டார். இப்பத்திரிகை ஹிந்தியிலும், உருதுவிலும் வெளியாகிறது. லக்னோ, ஃபாய்ஸாபாத், அலிகார், சஹாரான்பூர், அஸம்கார் மற்றும் மும்பையிலிருந்து ஆகிய நகரங்களிலிருந்தும் இப்பத்திரிகை வெளியாகிறது.
தால்வி, இந்திய குற்றவியல் சட்டம் 295 ஏ-யின் கீழ் புதன் அன்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய முகமது நபியின் கார்ட்டூனை மறுபிரசுரம் செய்ததன்மூலம் அவர் மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என தானேவிலுள்ள மும்பரா காவல்நிலைய மூத்த காவல் ஆய்வாளர் எஸ்எம்.முண்டே தெரிவித்தார்.
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 295(ஏ) பிரிவின்படி மத உணர்வுகளை கோபப்படுத்தும்விதமாக வேண்டுமென்றே மதம் மற்றும் மத நம்பிக்கைகளை கிண்டலிடிக்கும்விதமாக வார்த்தைகள், பேச்சு, எழுத்து அல்லது எந்தவொரு காட்சியாகவோ வெளிப்படுத்தும் தீய செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
பத்திரிகை ஆசிரியை தால்வி, கடந்த ஜனவரி 17 அன்று தனது செய்தித் தாளில் சார்லி ஹெப்டோ இதழின் அட்டைப்படத்தில் பிரசுரமாகி பிறகு சர்ச்சைக்குள்ளான முகமது நபியின் படத்தை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து உருது பத்திரிகை சங்கத்தார்கள் குறிப்பிட்ட அந்நாளிதழின் ஆசிரியையும் வெளியீட்டாளரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தானேவில் உள்ள மும்ப்ரா எனும் புறநகர் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தை போலீஸ் மிகவும் கவனமாக அணுக முடிவு செய்தது.
பாரீஸிலிருந்து வெளிவரும் சார்லி ஹெப்டோ பத்திரிகை சர்ச்சைக்குரிய முகமது நபியின் கார்ட்டூனை வெளியிட்டதால் அப்பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது. பாரீஸ் நகரத்தில் நிகழ்ந்த தாக்குதலை தொடர்ந்து மும்பையில் உள்ள சைபர் செல் போலீஸார் சார்லி ஹெப்டோ அட்டைப்படத்தை பதிவு செய்யப்பட்ட சமூக வலைதளப் பக்கங்களை மூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவத்நாமா பத்திரிகை ஆசிரியை தால்வியின் கருத்தை அறிய தொலைபேசியில் முயன்றபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.