

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.பி.யும் அவரது கணவருமான சசி தரூருக்கு நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு தேவையான நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டு வருவதாகவும் வழக்கில் இன்னும் நிறைய தகவல் திரட்டப்பட வேண்டியுள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சுனந்தா மரணம் குறித்த மருத்துவ அறிக்கையில் அவர் விஷம் ஏற்றப்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டதையடுத்து டெல்லி போலீஸார் கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், சந்தேகப்படும் நபராக ஒருவர் பெயரையும் இன்னும் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், சசி தரூருக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து இன்று இது தொடர்பாக விளக்கமளித்துள்ள டெல்லி காவல் ஆணையர் பாஸி, "சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.பி.யும் அவரது கணவருமான சசி தரூருக்கு நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை" என கூறியுள்ளார்.