

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காவல் நிலையத்திலேயே சிறுமியை பலாத்காரம் செய்த காவலர்கள் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உ.பி. பதான் மாவட்டத்தில் காவலர்கள் இருவரால் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு, காவல் நிலையத்திலேயே பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று நடந்தது.
பதான் மாவட்டம் முஸாஜங் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து 14 வயது சிறுமியை இரண்டு காவலர்கள் கடத்தியுள்ளனர்.
பின்னர், காவல் நிலையத்துக்கு அந்தப் பெண்ணை கொண்டு வந்த காவலர்கள் இருவரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். இதனையடுத்து காவலர்கள் வீர் பால் யாதவ், அவ்னிஷ் யாதவ் ஆகிய இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாக இருந்த இரண்டு காவலர்களையும் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அவ்னிஷ் யாதவ் என்ற காவலர் பரேலி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்டார். மற்றொருவரும் விரைவில் பிடிபடுவார் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.