

பிஹாரில் 4 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து கடந்த நவம்பர் 1-ம் தேதி சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது.
இந்த 4 எம்எல்ஏக்களும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக ஆளும்கட்சி குற்றம் சாட்டியது.
மேலும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்களின் எம்எல்ஏ பதவியை பறிக்குமாறு சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரிக்கு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று கியானேந்திர சிங் கயானு, நீரஜ்குமார் பப்லு, ராகுல் சர்மா, ரவீந்திர ராய் ஆகிய 4 எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த நவம்பர் 1-ம் தேதி உத்தரவிட்டார்.
சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து இந்த 4 எம்எல்ஏக்களும் பாட்னா உயர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 3-ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.
இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜே.பி.சரண் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்தார். “கட்சித்தாவல், கருத்து வேறுபாடு இரண்டும் ஒன்றல்ல. வெவ்வேறானவை. இவர்கள் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தாங்களாக விலகவில்லை. இவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து மாற்று வேட்பாளரை நிறுத்தவில்லை. கட்சி வேட்பாளரை ஆதரித்தே வாக்களித்துள்ளனர். கருத்துவேறுபாட்டால் தனித்து செயல்படுவதை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதாக கருத முடியாது”என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அதே நீதிமன்றத்தில் (பாட்னா உயர் நீதிமன்றம்) ஐக்கிய ஜனதா தளம் மேல்முறையீடு செய்ய வுள்ளது. இந்நிலையில் இதே குற்றச்சாட்டுகளின் பேரில் மேலும் 4 ஆளும் கட்சி எம்எல்ஏக்களை சபாநாயகர் கடந்த மாதம் தகுதி நீக்கம் செய்தார்.
இவர்களும் தங்கள் பதவி பறிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.