Published : 04 Jan 2015 10:28 AM
Last Updated : 04 Jan 2015 10:28 AM

2014-ல் 66 புலிகளை இழந்தது இந்தியா

2014-ம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள வனப் பகுதியில் 66 இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஆண்டின் இறுதிநாளில் மட்டும் 2 புலிகள் இறந்துள்ளன. 2014-ல் ஒரே நாளில் 2 புலிகள் இறந்தது இந்நாளில் மட்டுமே. இதில் ஒரு புலி கர்நாடக மாநிலம் பண்டிப்பூரிலும் மற்றொரு புலி மகாராஷ்டிர மாநிலம், தடோபா அந்தாரி பகுதியிலும் இறந்துள்ளன.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘டைகர்நெட்’டில் காணப்படும் புள்ளிவிவரங்களின்படி, தமிழக வனப்பகுதியில் இருந்துதான் கடந்த ஆண்டு அதிக அளவில் அதாவது 15 புலிகள் இறந்துள்ளது. இதையடுத்து மத்தியப்பிரதேசத்தில் 14 புலிகளும் இறந்துள்ளன. தமிழ் நாட்டில் இறந்த புலிகளில் முதுமலை புலிகள் சரணாலயத்தில் மட்டும் 6 புலிகள் இறந்துள்ளன.

கடந்த ஆண்டு இறந்த புலிகளில் பெரும்பாலானவை வேட்டையாடப் பட்டே இறந்துள்ளன. ஆனால் எத்தனை புலிகள் வேட்டையாடப்பட்டன என்ற விவரம் தரப்பட வில்லை. சுமார் 50 புலிகள் இறப்புக்கு இது காரணமாக இருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் இறந்த 66 புலிகளில் ஒரேயொரு புலி மட்டுமே இயற்கையான காரணங்களால் இறந்துள்ளது. பிஹாரின் வால்மீகி புலிகள் சரணாலயத்தில் இப்புலி இறந்துள்ளது. நிலப்பகுதி ஆதிக்கப் போட்டி காணமாக புலிகள் இடையே நடைபெறும் சண்டை காரணமாக 3 புலிகள் இறந்ததாக கூறப்படுகிறது.

மனிதர்களை கொன்று சாப்பிடத் தொடங்கியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் 2 புலிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டன. இதில் ஒரு புலி, தமிழ்நாட்டில் ஊட்டி அருகே கடந்த ஜனவரி 23-ம் தேதியும், மற்றொரு புலி, மகாராஷ்டிரத்தின் சந்திரப்பூர் அருகே கடந்த ஜூலை 19-ம் தேதியும் கொல்லப்பட்டன.

வால்மீகி புலிகள் சரணாலயத்தில் புலிக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. ஆந்திரம், அசாம், கேரளம், கர்நாடகம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் புலிகள் இறந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 32 புலிகள் இறந்துள்ளன. எல்லா மாதங்களிலும் புலிகள் இறப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக டிசம்பரில் 10 புலிகள் இறந்துள்ளன.

கடந்த ஆண்டு 7 புலித்தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மகாராஷ்டிரத்தில் 3, ஆந்திரத்தில் 2, தமிழ்நாடு, கேரளத்தில் தலா 1 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புலித்தோல் உட்பட புலியின் உடல் பாகங்கள் பறிமுதல் தொடர்பாக கடந்த ஆண்டு 12 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2013-ம் ஆண்டில் நாடு முழுவதும் 63 புலிகள் இறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 16-ம் இதையடுத்து மகாராஷ்டிரத்தில் 9-ம் இறந்துள்ளன.

2014-ல் கர்நாடகத்தில் 7 புலிகள் மட்டுமே இறந்துள்ளன. இதுபோல் 2013-ல் தமிழ்நாட்டில் 1 புலி மட்டுமே இறந்ததாக பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x