ஒபாமா, மோடி பட காற்றாடிகளுக்கு நல்ல வரவேற்பு

ஒபாமா, மோடி பட காற்றாடிகளுக்கு நல்ல வரவேற்பு
Updated on
1 min read

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் காற்றாடி திருவிழாவையொட்டி, குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா படங்களுடன் கூடிய காற்றாடிகள் விற்பனை படுஜோராக உள்ளது.

ஒபாமா, டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்தப் பின்னணியில் மோடி- ஒபாமா காற்றாடிகளுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இத்தகைய காற்றாடிகள் இதுவரை ஆயிரக்கணக்கில் விற்பனையாகியுள்ளன. பாவேஷ் சிசோடியா என்ற வாடிக்கையாளர் கூறும்போது, “மோடியும் ஒபாமாவும் இணைந்திருக்கும் படங்களுடன் வந்திருக்கும் காற்றாடிகள் மக்களிடையே நல்ல தகவலை கூறுவதாக உள்ளன. நாடு முழுவதும் சகோதரத்துவத்தை பரப்பும் வகையில் இவை உள்ளன. அமெரிக்காவுடன் வர்த்தகரீதியில் நல்ல பலன் பெற இது உதவும்” என்றார்.

காற்றாடி கடை உரிமையாளர் நிலேஷ் மிஸ்திரி கூறும்போது, “மோடி படத்துடன் கூடிய காற்றாடிக்கு இந்த ஆண்டு நல்ல வரவேற்பு உள்ளது. 10 ஆயிரம் மோடி காற்றாடிகளை விற்பனை செய்துள்ளேன். தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் காற்றாடி களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன்” என்றார்.

ஜெய்ப்பூரில் சர்வதேச காற்றாடி திருவிழா

இதனிடையே ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஹாலந்து, பெல்ஜியம், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் மும்பை, மங்களூர், ராஜ்கோட் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் பங்கேற்றுள்ளனர்.

ஜெய்ப்பூரின் சித்திரகூட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 4 முதல் 5 மீட்டர் நீளத்தில், டிராகன், பறவைகள், மீன்கள் என பல்வேறு வடிவங்கள் கொண்ட காற்றாடிகள் ஆகாயத்தில் பறக்கவிடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in