

சுமார் 375 ஹெக்டேர் நிலத்துக்கான சொத்துரிமை கைமாற்றத்தை ராஜஸ்தான் அரசு ரத்து செய்து கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலங்களில் ஒரு பகுதி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரிகிறது.
வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டத்தில் போலி விற்பனையாளர்களிடமிருந்து நிலம் வாங்கியதாக புகார் எழுந்ததையடுத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துணை ஆட்சியர் ரான் சிங் தெரிவித்தார்.
கோலாயத் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் வட்டாட்சியர் டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுத்திருந்தார். 18 சொத்துகள் தொடர்பான உரிமை மாற்றம் சட்டத்துக்கு புறம்பானது என தெரியவந்திருப்பதாக அதில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான கொடுக்கல், வாங்கல் ஒப்பந்தங்கள், நிலம் விற்பனை செய்தவர்களின் பட்டியல், கடன் பெற்ற விவரம் மற்றும் நிறுவனத்தின் வாரியக் குழு கூட்டத்தில் இதுதொடர் பாக எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான விவரம் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு வருமான வரித் துறை கோரியிருந்தது.
முன்னதாக, நிதி மற்றும் நில பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு ஸ்கைலைட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து பதில் அளிக்க வதேராவுக்கு 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
பிகானிர் மாவட்டத்தில் உள்ள கஜ்னர், கோய்லாரி கிராமங்களில் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி நிறுவனம் 2010 ஜனவரியில் நிலம் வாங்கியது. இதில் ராஜஸ்தான் மாநில நில உச்சவரம்பு சட்டம் மீறப்பட்டதாக புகார் எழுந்தது.
அதைத்தொடர்ந்து அதிக லாபம் வைத்து இந்த நிலம் ஏராளமான நபர்களுக்கு விற்கப்பட்டது. முன்னதாக 2006-07-ல் துப்பாக்கிச்சுடும் பயிற்சி தளம் அமைப்பதற்காக நிலம் தந்தவர்களுக்கு ஈடாக இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும். விவசாயிகள் என பொய்த் தகவல் கொடுக்கப்பட்டு இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிகானிர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.