அலிகர் பல்கலை. ஆட்சிமன்ற குழுவில் பாஜக எம்பி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

அலிகர் பல்கலை. ஆட்சிமன்ற குழுவில் பாஜக எம்பி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக பாஜக எம்பி குன்வார் பர்தேந்திரா சிங் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாஜக எம்.பி.க்கள் குன்வார் பர்தேந்திரா, சத்தீஷ்குமார் கௌதம், ராஜ்வீர் சிங், போலா சிங், லோக்ஜனசக்தி கட்சி எம்.பி. மெஹபூப் அலி கௌஸர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. முகம்மது பதருத்தோஸா கான் ஆகியோர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பாஜகவைச் சேர்ந்த உத்தரப்பிரதேசம் பிஜ்னோர் தொகுதி எம்.பி. குன்வார் பர்தேந்திரா சிங், முசாபர் நகர் கலவரத்தில் தொடர்புடையவர் ஆவார். இந்த கலவரம் தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமித்ததற்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அப்துல்லா ஆஜம், செயலாளர் ஷெஹஜாப் அகது, துணைத்தலைவர் சையத் மசூதுல் ஹசன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

முசாபர்நகர் கலவரத்தை முன் நின்று நடத்தியதாக கைது செய்யப்பட்டு வழக்குகளைச் சந்தித்து வரும் பர்தேந்திரா எம்பியை ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினராக நியமித்தது நல்மரபுகளுக்கு எதிரானது. இவருடன் நியமிக்கப்பட்ட ராஜ்வீர்சிங், சத்தீஷ் கௌதம் ஆகியோரும் மதக்கலவரத்தை தூண்டியவர்கள். இவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in