Published : 07 Jan 2015 02:47 PM
Last Updated : 07 Jan 2015 02:47 PM

இந்து மதத்தைக் காக்க நாம் இருவர் நமக்கு நால்வர் கொள்கையைப் பின்பற்றுவீர்: பாஜக எம்.பி. சாக்‌ஷி பேச்சால் சர்ச்சை

இந்து மதத்தைக் காக்க இந்து தாய்மார்கள் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் நடந்த மதபோதக கூட்டத்தில் பேசிய சாக்‌ஷி மகராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, "நாம் இருவர் நமக்கொருவர் என்ற கொள்கையை நாம் இப்போது பின்பற்றி வருகிறோம். ஆனால் சில வஞ்சகர்கள் ஆண்- ஆணுடன், பெண்- பெண்ணுடனும் உறவு கொள்வதில் தவறில்லை என பிரச்சாரம் செய்கின்றனர்.

முந்தைய ஆட்சியும் இத்தகைய கலாச்சார சீரழிவை தவறில்லை என்றனர். இந்து மதத்தை வளர்க்க இந்து தாய்மார்கள் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

ஒரு குழந்தையை தேச பாதுகாப்புக்காக ராணுவத்துக்கும், ஒரு குழந்தையை கலாச்சார பாதுகாப்புக்காக சந்நியாசியாகவும் ஆக்குங்கள்.

ஒரு குறிப்பிட்ட மதத்தில் நான்கு மனைவியரை வைத்துக் கொள்வதும் நாற்பது குழந்தைகளை பெற்றுக் கொள்வதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இனி அது எடுபடாது. இந்து தாய்மார்கள் இந்து மதத்தைக் காக்க 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பசுவதை செய்பவர்களுக்கும், மதமாற்றம் செய்பவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இக்குற்றங்களுக்கு அரசு விரைவில் மரண தண்டனை விதிக்கும். கர் வாப்ஸி நிச்சயம் மதமாற்றம் இல்லை. ராமர் கோவில் அயோத்தியில் நிச்சயம் கட்டப்படும். அதில் மாற்றமில்லை" என்று அவர் பேசினார்.

சாக்‌ஷி மகராஜ் கருத்துக்கு உ.பி. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "இந்தியாவின் மக்கள் தொகை கொள்கையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாஜக தலைவர் என முக்கிய தலைவர்கள் இவ்விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

மதரஸாக்களில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுகிறது என்றும், காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸே ஒரு தேச பக்தர் என்ற கருத்துகளை கூறி ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியவர்தான் இந்த சாக்ஷி மகராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x