Published : 28 Jan 2015 09:22 am

Updated : 28 Jan 2015 09:24 am

 

Published : 28 Jan 2015 09:22 AM
Last Updated : 28 Jan 2015 09:24 AM

அமித் ஷா எனும் அலாவுதீன் பூதம்

2014-ம் ஆண்டின் பிற்பகுதியில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராளிகளைத் தூண்டும் விதத்தில் பேசினார்கள். ‘‘இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்துகொண்டு, அவர்களை முஸ்லிம்களாக மதம் மாற்றும் காதல் ஜிகாத்தில் முஸ்லிம் இளைஞர்கள் இறங்கியுள்ளார்கள்’’ என்றார் கோரக்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத். ‘‘காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே உண்மையான தேச பக்தர்’’ என்றார் உன்னாவ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சாக்ஷி மகராஜ். ‘‘ராமரை வணங் காதவர்களும் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களும் விஷமக்காரர்கள்’’ என்றார் ஃபதேபூரிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட சாத்வி ஜோதி நிரஞ்சனா. இவர் மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். முஸ்லிம் களையும் கிறிஸ்தவர்களையும் இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அலிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சதீஷ் கவுதம்.

இந்த 4 பேரும் மத்திய அரசில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த நால்வரின் பேச்சுகள்குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று விளக்க வேண்டும் என்று ஆட்சியின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க் கட்சித் தலைவர்கள் கேட்டனர். இதனால், மாநிலங்களவையில் எந்தவித அலுவலும் மேற்கொள்ளப்பட முடியாமல் 4 நாட்களுக்கு அவை முடக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் கோரியபடி அவைக்கு வர மறுத்த பிரதமர், பின்னர் அந்த நால்வரின் பேச்சுகளைக் கண்டிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அது சம்பந்தப்பட்டவர்களைப் போதுமான அளவு கண்டிக்க வில்லை என்று நினைத்ததால், எதிர்க் கட்சிகள் திருப்தி அடையவில்லை.


அமித்ஷாவின் தொடர்பு

இந்த சர்ச்சைகளையெல்லாம் விரிவான செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் ஒரு முக்கியமான அம்சத்தைக் கவனிக்கத் தவறிவிட்டன. இந்த 4 உறுப்பினர்களும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சியின் பொதுச் செயலாளராக அப்போது பதவி வகித்த அமித் ஷாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொறுப்பு அமித் ஷாவிடமே தரப்பட்டது. செய்தி ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் இந்தத் தொடர்பைக் கவனிக்கத் தவறிவிட்டன. நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த 4 உறுப்பினர்களின் பேச்சுகளுக்காகப் பிரதமரைத்தான் குறிவைத்துத் தாக்கினார்களே தவிர, கட்சியின் தலைவராகவும் பின்னர் பொறுப்பேற்றுக்கொண்ட அமித் ஷா விளக்கம் தர வேண்டும் என்று கேட்கவேயில்லை.

அமித் ஷாவை நாட்டின் பிற அரசியல் தலைவர்களைப் போலவே ஆபத்தில்லாதவர் என்று கருதுவதும் நடத்துவதும் கவலையை அளிக்கிறது. மாநில உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து கைதான முதல் அரசியல்வாதி அமித் ஷாதான். முக்கிய குற்ற வழக்குகளில் சாட்சிகளைக் குலைத்துவிடுவார், ஆவணங்களைத் திருத்திவிடுவார் என்று உச்ச நீதிமன்றத்தாலேயே சொந்த மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட முதல் அரசியல் தலைவரும் அவர்தான். தன்னுடைய மாநிலக் காவல் துறையைத் தனது அரசியல் சிந்தனையைப் பின்பற்றி நடக்குமாறு மாற்றியவர் என்றும் தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டித்தவர் என்றும் கூறப்பட்டவரும் அவர்தான்.

பாரதிய ஜனதாவுக்கு மக்களவைப் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்தவுடன் அமித் ஷாவின் அரசியல் பின்னணி பெரும்பாலானவர்களால் மறக்கப் பட்டுவிட்டது.

உத்தரப் பிரதேசத்தின் மொத்த முள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெறக் காரணமாக இருந்தார் என்பதற்காகக் கட்சியின் தேசியத் தலைவராகவே பதவி உயர்வு பெற்றார் அமித் ஷா. பாரதிய ஜனதாவுக்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றி கிடைத்ததற்கு அமித் ஷா மேற்கொண்ட பிரச்சார உத்தி, ஒருங்கிணைப்பு ஆகியவையே காரணம் என்று பத்திரிகைகளால் புகழப்பட்டது. அவருடைய கடந்த கால அரசியல் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டதல்ல என்றாலும், மிகப் பெரிய அரசியல் மேதை என்றும் சிறந்த சாணக்கியர் என்றும் பத்திரிகைகள் பாராட்டித் தள்ளின.

பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதும் பண்டிதர்கள், அமித் ஷா மேற்கொண்ட வேட்பாளர் தேர்வைப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள். அவரால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் யோகி ஆதித்யநாத், சாக்ஷி மகராஜ், சாத்வி ஜோதி நிரஞ்சனா, சதீஷ் கவுதம். இருப்பினும், இந்த 4 பேரின் பேச்சுக்கு விளக்கம் தர வேண்டும் என்று கட்சித் தலைவர் அமித் ஷாவை யாருமே கேட்கவில்லை (சாக்ஷி மகராஜிடம் மட்டும் கட்சித் தலைமை விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது). சங்கப் பரிவாரத்தின் இதர உறுப்பினர்களும் தங்களுடைய நோக்கம் என்ன என்பதை ஒளிக்காமல், மறைக்காமல் வெளியிட்டனர். ‘இந்தியாவே இந்து ராஷ்டிரம்தான், தங்களுடைய பூர்வீகம் இந்து மதம்தான் என்று இந்நாட்டில் பிறந்த அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை திட்டவட்டமாக அறிவித்தது. இந்த லட்சியத்தை ஒட்டியே விஸ்வ இந்து பரிஷத், பிற மதத்தவர்களைத் தாய் மதத்தில் கொண்டுவந்து சேர்க்கும் மதமாற்ற நிகழ்ச்சியை உடனடியாக மேற்கொண்டது. தங்களுடைய இறுதி லட்சியம், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் இந்துவாக்குவதுதான் என்று அதன் தலைவர் பிரவீண் தொகாடியா அறிவித்தார்.

நரேந்திர மோடியே இந்து ராஷ்டிரம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்தான். முதலமைச்சராகப் பதவியேற்ற தொடக்க காலத்தில், கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் விமர்சித்துப் பேசியவர்தான் நரேந்திர மோடி. 2008-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்துதான் மிதவாதத் தலைவராகக் கருதப்படும் வகையில் பேச்சை மாற்றிக்கொண்டார். உடனே, அவர் வளர்ச்சிக்கான தலைவராகக் கருதப்பட்டார். அவருடைய சொல், சிந்தனை, செயலால் குஜராத் மாநிலமே வளர்ச்சி கண்டதாகப் பேசப்பட்டது. பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட பிறகு, ‘கடந்த காலத்துக்கான’ தலைவராக அல்லாமல், ‘எதிர் காலத்துக்கான’ தலைவராகத் தன்னை மாற்றிக்கொண்டார். அரசியல் பொடிவைத்துப் பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம் என்றாலும் சமூகங்களை விடுத்து, தனக்கு எதிரான அரசியல் தலைவர்களைக் குறிவைத்துப் பேசத் தொடங்கினார்.

வெற்றிக்குக் காரணம்

பாரதிய ஜனதாவைப் பெருவாரி யான மக்கள் ஏற்கும் விதத்தில் ஒப்பனை செய்ததுடன் தனது பேச்சுத் திறமை மூலம் ஒரே கோணத்தில் சிந்திக்க வைத்து மக்களவைப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றார் மோடி. மோடிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாகக் கருதுகிறவர்கள் இல்லை என்று துணிந்து கூறலாம். காங்கிரஸ் கட்சியின் ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றை வெறுத்த மக்கள், நரேந்திர மோடியைத் துடிப்புள்ள, கவர்ச்சி மிக்க, சுயமாக முன்னுக்கு வந்த நல்ல தலைவராகப் பார்த்தார்கள். அவர் வந்தால் ஊழல் குறையும், நாடு வளம் பெறும், நாட்டின் பாதுகாப்பு வலுப்படும் என்று நம்பினார்கள். நவீன காலத்துக்கு ஏற்ற அரசியல் தலைவர் மோடி. அவரால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கும் நல்ல நிர்வாகத்துக்கும் அவர் உத்தரவாதம் என்ற எண்ணங்கள் ஏற்படுத்தப்பட்டதால் மக்கள் அவரை நம்பி வாக்களித்தார்கள்.

அவரைப் பற்றிய இந்தக் கண்ணோட்டமெல்லாம் அவருக்கு அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கும் பொருந்துமா? இங்குதான் சந்தேகம் ஆழமாகிறது. வாக்குச் சீட்டு மூலம் இந்துக்கள் பழிவாங்க வேண்டும் என்று அமித் ஷா பேசியதைத் தேர்தல் ஆணையம் கண்டித்ததை நினைவுகூர வேண்டும். அரசின் வளர்ச்சித் திட்டங்களில் தங்களுக்கு ஆர்வம் இல்லை. மோடியால் ஒரு காலத்தில் பேசப்பட்டு, இப்போது அவரால் பேசப்படாமல் இருக்கும் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதுதான் தங்களுடைய லட்சியம் என்பதை 4 மக்களவை உறுப்பினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யோகி ஆதித்யநாத், ஜோதி நிரஞ்சனா ஆகியோரின் பேச்சை கட்சித் தலைவர் அமித் ஷா பகிரங்கமாகக் கண்டிக்காமல் இருப்பதிலிருந்தே இந்தப் பேச்சு அவருக்கு உடன்பாடுதான் என்பதை உணர்ந்துகொள்ளலாம். இதைச் சுட்டிக்காட்டி நிருபர்கள் கேட்டபோது, “சமூக ஒற்றுமைதான் எங்களுடைய லட்சியம்” என்று சுற்றி வளைத்துத்தான் பதில் அளித்திருக்கிறார் அமித் ஷா.

ஆபத்தான அறிகுறிகள்

அறிகுறிகள் ஆபத்தாக இருக்கின்றன. காரணம், உத்தரப் பிரதேசத்தை மதரீதியாகப் பிளவுபடுத்துவதில் அமித் ஷாவுக்கும் அவருடைய கட்சிக்கும் உகந்தாற்போலவே முலாயம் சிங் செயல்பாடும் அவருடைய கட்சியும் இருக்கிறது. இரு தரப்புக்குமே மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துவதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. முலாயமும் ஆசம் கானும் முஸ்லிம்களிடையே அச்ச உணர்வைக் கிளறுவார்கள். யோகி ஆதித்யநாத், சாத்வி ஜோதி நிரஞ்சனா போன்றவர்கள் இந்துக்களிடையே பீதியை ஏற்படுத்துவார்கள். அசாதுதீன் ஒவாய்சியும் மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லிமினும் சூழலை மேலும் மோசமாக்குவார்கள். அமித் ஷா தலைமையில் பாரதிய ஜனதா இரட்டை வேடம் போடும். எல்லா இளைஞர்களுக்கும் வேலை, கிராமங்களில் 24 மணி நேரமும் மின் சப்ளை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசுவார். களத்திலோ கட்சித் தொண்டர்கள் இந்துக்களின் பெருமையை நிலைநாட்டப் பாடுபடுவார்கள்.

போலி என்கவுன்டர் சம்பவத்தில் அமித் ஷாவுக்கு நேரடிப் பங்கு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) சமீபத்தில் அளித்த நற்சான்றிதழை ஷாவின் ஆதரவாளர்கள் ஏற்கெனவே பேசிவிட்டனர். ஆனால், நம்முடைய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டபூர்வ கடமைகளுக்கும் நிலைக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் - நாடாளுமன்ற உறுப் பினர்கள் பகிரங்கமாகப் பேசுவதையும் ஆதரிப்பதையும் கண்டிக்காமல், மறைமுகமாக அங்கீகரிப்பவர் நாட்டின் முக்கியமான அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.

அமித் ஷா குஜராத்தில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தது, உத்தரப் பிரதேசத்தில் மக்களவைப் பொதுத் தேர்தலின்போது பிரச்சாரத்துக்குத் தலைமை ஏற்று நடத்தியது, கட்சிக்குத் தேசியத் தலைவராக இப்போது நடந்துகொள்வது என்று 3 வெவ்வேறு வகையிலான நடவடிக் கைகளையும் ஆராயும்போது, தனக்கிட்ட பணியின் முடிவு எப்படி என்பதில்தான் அவருக்கு அக்கறை இருக்கிறதே தவிர, அதை நிறைவேற்ற எந்த வழிமுறையைக் கையாள்வது என்பதில் கவலையே இல்லை என்று தெரிகிறது. எனவேதான் செய்தி ஊடகங்கள் அவருக்குத் தரும் மரியாதையும் பாராட்டும் நமக்குக் கவலையைத் தருகின்றன.

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்; தமிழில்: சாரி

நரேந்திர மோடிஅமித் ஷாஅலாவுதீன் பூதம்

You May Like

More From This Category

More From this Author