Last Updated : 23 Jan, 2015 11:33 AM

 

Published : 23 Jan 2015 11:33 AM
Last Updated : 23 Jan 2015 11:33 AM

அத்வானி, அமிதாப், ரஜினிக்கு பத்ம விருது?- 10 சாதுக்களின் பெயர்களும் வெளியானதால் சர்ச்சை

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்கள் தவிர யோகா குரு ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட 10 சாதுக்களின் பெயர்களும் வெளியாகி உள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுவது வழக்கம். விருது பட்டியல் ஜனவரி 25-ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சில இணையதளங்களில் பத்மபூஷண் விருதுகள் பெறுவோர் என 148 பேர் கொண்ட பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகர்கள் திலீப்குமார், பிரான், அமிதாப்பச்சன், சல்மான்கானின் தந்தையும் கதாசிரியருமான சலீம்கான், தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி, இசை அமைப்பாளர்கள் அன்னு மல்லீக் மற்றும் ரவீந்திரா ஜெயின் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாபின் முதல் அமைச்சருமான பிரகாஷ்சிங் பாதல் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் தவிர பாஜகவின் ஆதரவாளரும் யோகா குருவான ராம்தேவ், வாழும் கலை நிறுவனர்  ரவிசங்கர், துளசி மடத்தின் ஜெகத்குரு ராமானந்த் ஆச்சார்யா, தும்கூரை சேர்ந்த சிவகுமாரா சுவாமி, ஹரித்துவார் சுவாமி சத்யமிர்தானந்த் கிரி, அமிர்தானந்த மயி உள்ளிட்ட 10 சாதுக்களின் பெயர்களும் பட்டியலில் வெளியாகி உள்ளன. பாஜகவுக்கு ஆதரவான சாதுக்களுக்கு விருது வழங்கப்படுவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, கே.எஸ்.வாஜ்பாய், பி.வி.ராஜாராமன், பொருளாதார வேளாண் விஞ்ஞானி அசோக் குலாத்தி, சட்ட நிபுணர்கள் ஹரீஷ் சால்வே, கே.கே.வேணுகோபால், அரசியல் அமைப்பு சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் பெயர்களும் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.

ஹெச்.சி.எல் நிறுவன அதிபர் ஷிவ் நாடார், சிப்லாவின் ஒய்.கே.ஹமீத் உள்ளிட்ட தொழில திபர்களின் பெயர்களும் பட்டிய லில் உள்ளன. விளையாட்டு வீரர்களில் ஹாக்கி குழுவின் தலை வர் சர்தாரா சிங், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, செஸ் கிராண்ட் மாஸ்டரான சசிகிரண் கிருஷ்ணன், மல்யுத்த வீரர் சுசில்குமார், அவரது பயிற்சியாள ரான சத்பால், ஒரு கால் ஊனமாக நிலையில் இமயமலை சிகரம் தொட்ட அருணிமாலால் பெயர்களும் பட்டியலில் உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2015-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. இந்த விருதுகள் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி வெளியிடப்படுவது வழக்கம். தற்போது சில ஊடகங்களில் வெளியான பெயர்கள் ஊகத்தின் அடிப்படையிலானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x