

ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கிடையே ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சம்பா மாவட்டம் ஹிராநகர் அருகே உள்ள சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆள் நடமாட்டம் இருந்ததால் நமது வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதை யடுத்து, அங்குள்ள இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சிறிய வகை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
இதனால் இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் நடை பெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் இருதரப்புக்கும் எவ்வித உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. அதேநேரம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்த வில்லை. இந்த மாத தொடக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் பொது மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதை யடுத்து 10 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல் தீவிரவாதி கைது
குப்வாரா மாவட்டம் தங்தர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப் பாட்டுக்கோடு பகுதியில் கடந்த 9-ம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஷவுகத் அகமது அவான் என்பவரை கைது செய்த தாக போலீஸார் நேற்று தெரி வித்தனர்.
ஷோபியான் மாவட்டம் பெலிபோரா கிராமத்தைச் சேர்ந்த அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ராணுவ அதிகாரி ஆளுநரிடம் விளக்கம்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ராணுவ வடக்கு பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா ஜம்மு காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ராணுவ அதிகாரி ஹூடா ஆளுநரை சந்தித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு நிலவரம், எல்லையில் நடைபெற்று வரும் தீவிரவாத ஊடுருவல் முயற்சி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது ஆகியவை குறித்து ஹூடா விளக்கம் அளித்தார். மேலும் பாதுகாப்பை பலப்படுத்துவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்” என்றார்.