Published : 25 Feb 2014 06:26 PM
Last Updated : 25 Feb 2014 06:26 PM

அதிமுக உள்பட 11 கட்சிகள் இணைந்து மாற்று அணி- தேர்தலுக்குப் பிறகு பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடிவு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்கி உள்ளன. தேர்தலுக்குப் பிறகு பிரதமரைத் தேர்ந்தெடுக்க இந்த புதிய கூட்டணி முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இடம்பெறாத இடதுசாரிகள், அதிமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரகாஷ் காரத் பேட்டி

இந்த கூட்டத்துக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் நிருபர்களிடம் கூறியதாவது:

மதவாதத்துக்கு எதிராக கடந்த அக்டோபர் 30-ல் டெல்லியில் கூட்டம் நடத்தினோம். இதில் கலந்து கொண்ட 11 கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் கடந்த 5-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் 11 கட்சிகளும் ஓரணியில் இணைய முடிவு செய்யப்பட்டது.

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 11 கட்சிகளின் மூத்த தலைவர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினோம்.

இதில் அசாம் கண பரிஷத் தலைவர் பிரபுல் மஹந்தாவின் தாயார் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை. எனினும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். அதேபோல் பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிசா முதல்வருமான பட்நாயக்கிற்கு முக்கியமான அரசுப் பணி இருந்ததால் அவரும் வர முடியவில்லை.

தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் செய்வதில் வரலாறு படைத்துள்ளது. மத்திய அரசின் தவறான முடிவுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் காங்கிரஸை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம்.

இதேபோல பாஜகவும் ஊழலில் வரலாறு படைத்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடையச் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றார்.

முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல்…

பிரகாஷ் காரத் மேலும் கூறியபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல பிரதமர் யார் என்பது தேர்தல் வெற்றிக்குப் பிறகு முடிவு செய்யப்படும். அப்படி தேர்ந்தெடுப்பதில் கூட்டணியில் பிரச்சினை இருக்காது என்று தெரிவித்தார்.

இதற்கு உதாரணமாக முன்னாள் பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரின் பெயர்களை காரத் சுட்டிக் காட்டினார்.

சரத் யாதவ் பேட்டி

ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் நிருபர்களிடம் கூறியபோது, ‘இது மூன்றாவது கூட்டணி அல்ல, முதல் கூட்டணி’ என்றார்.

நிதிஷ் குமார் உறுதி

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியபோது, தேர்தலுக்கு முன்போ, தேர்தல் முடிவுகளுக்கு பிறகோ பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை எனக் கூறினார்.

முலாயம் சிங் நம்பிக்கை

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் பேசிய போது, அணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை 11ல் இருந்து 15 ஆக அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்றோர்

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, செயற்குழு உறுப்பினர் ஏ.பி.பரதன், ஐக்கிய ஜனதா தள பொதுச்செயலாளர் சரத் யாதவ், செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா, அதிமுக எம்.பி. தம்பிதுரை, புரட்சிகர சோஷலிஸ்ட் தலைவர் சந்திரசூடன், பார்வர்ட் பிளாக் தலைவர் தேவவிரதா பிஸ்வாஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவின் தலைவர் பாபுலால் மராண்டி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x