

ஜமாத் உத் தாவா அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்யவில்லை என்றும், ஐ.நா. வழிகாட்டுதலின்படி அதன் வங்கிக் கணக்குகளை மட்டுமே முடக்கியிருக்கிறது என்றும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜமாத் உத் தாவா இயக்கத்தை ஐ.நா. சபை கடந்த 2008-ம் ஆண்டே தடை செய்துவிட்டது என்பது கவனிக்கத்தக்கது.
டெல்லியில் இந்தியா டுடே வட்டமேஜை மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய அப்துல் பசித், "தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஐ.நா. சபை வழிகாட்டுதலை பாகிஸ்தான் பின்பற்றுகிறது. அதன்படி, ஜமாத் உத் தாவா இயக்கத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதன் தலைவர் ஹபீஸ் சையது வெளிநாடுகளுக்கு செல்ல தடை உள்ளது. ஆனால் அந்த இயக்கத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்யவில்லை. எங்கள் நடவடிக்கைகள் ஐ.நா. வழிகாட்டுதலின்படியே நடந்துள்ளது.
ஹபீஸ் சையது போன்றவர்களை சிறையில் அடைக்குமாறு ஐ.நா வழிகாட்டுதலில் கூறப்படவில்லை. ஜமாத் உத் தாவா இயக்கத்தை பொருத்தவரை இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என நம்புகிறேன். அதேபோல், அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் சமமாக நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
அண்மையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி பாகிஸ்தான் வந்துசென்றார். அவரது அறிவுறுத்தலின்படி தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் ஏதேனும் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என பாகிஸ்தான் உள்துறை செயலரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதர் அப்துல் பாசித், ஜமாத் உத் தாவா அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்யவில்லை என கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.