

குடியரசு தினவிழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நெறிமுறைக்கு உட்பட்டே துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி சல்யூட் செய்யவில்லை என்று அவரது சிறப்புப் பணி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, சல்யூட் செய்யாதது குறித்த சர்ச்சை எழுந்தது.
இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் விதமாக அதற்கான விளக்கத்தை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் சிறப்புப் பணி அதிகாரி குர்தீப் சிங் சப்பல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "தேசிய கீதம் இசைக்கப்படும்போது சீருடையில் உள்ள அதிகாரிகளும், முதன்மை நபர்களும் மட்டுமே சல்யூட் செய்ய வெண்டும். சீருடை அணியாதவர்களும் மற்றவர்களும் நிமிர்ந்து நேராக நிற்க வேண்டும்.
அதன்படி, குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன் ஆவார். அவர் நமது ஆயுதப்படைகளின் தளபதியும் ஆவார். எனவே, நெறிமுறைப்படி குடியரசுத் தலைவர் தேசிய கொடிக்கு சல்யூட் செய்ய வேண்டும். துணைக் குடியரசுத் தலைவர் நிமிர்ந்து நிற்க வேண்டும்" என்றார்.
நேற்று (திங்கட்கிழமை) குடியரசு தின நிகழ்ச்சி நிறைவுபெறும் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் ஆகியோர் தேசிய கொடிக்கு சல்யூட் செய்தனர்.
ஆனால், அவர்கள் அருகே இருந்த துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி சல்யூட் செய்யாமல் நின்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் படத் தொகுப்பு வெளியானதும், சமூக குறும்பதிவு தளமான ட்விட்டரில் ஹமீத் அன்சாரி சல்யூட் செய்யாதது குறித்து பல தரப்பினரால் விவாதிக்கப்பட்டதால் சர்ச்சை உருவானது குறிப்பிடத்தக்கது.