அயல்நாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்பது சிக்கல் நிறைந்த விவகாரம்: அமித் ஷா

அயல்நாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்பது சிக்கல் நிறைந்த விவகாரம்: அமித் ஷா
Updated on
1 min read

நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களால் கருப்புப் பண விவகாரம் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. ஆனாலும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் 700 பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் முக்கியமான சட்ட மசோதாக்களை அறிமுகம் செய்யவிடாமல் எதிர்கட்சிகள் இடையூறு செய்தன என்றும், வளர்ச்சியைத் தடுக்கும் அவர்களது முயற்சிகள் விரயமாக முடியும் என்றும் கூறினார்.

டெல்லி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா இன்று பேசும்போது, "அயல்நாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்பது என்பது சிக்கலான ஒரு விவகாரம், இது இந்தியாவின் கையில் மட்டுமில்லை. பலநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இதன் குறுக்கே உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி கருப்புப் பணத்தினால் நாடுகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை சர்வதேச அரங்கில் பேசி வருகிறார். பலநாட்டுத் தலைவர்களிடம் இது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட பாடுபட்டு வருகிறார். சர்வதேச ஒப்பந்தங்களில் உள்ள சிக்கல்கள் களையப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நிறைவேறிவிட்டால், தவறு செய்தவர்களுக்கு பாஜக தக்க தண்டனை அளிக்கும்” என்றார்.

எதிர்கட்சிகளைத் தாக்கிப் பேசிய அமித் ஷா, நாடாளுமன்றத்தை முடக்கும் அவர்களது செயல் விரயமாகவே முடியும் என்றும் வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி ‘பொய்களை கட்டவிழ்த்து விடுவதில்’ சாதனை படைத்துள்ளது என்று கூறிய அமித் ஷா, சாமானிய மக்களின் கட்சி என்று அவர்களது கட்சிக்கு ‘மலிவான விளம்பரம்’ தேடிக் கொள்கிறது என்று சாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in