Published : 06 Jan 2015 09:55 AM
Last Updated : 06 Jan 2015 09:55 AM

ஓடும் ரயிலில் எஃப்.ஐ.ஆர்.: ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவு

ரயில் பயணத்தின்போது குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவரின் பயணம் தடைபடாத வகையில் இனி, ஓடும் ரயிலிலேயே குற்றச் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வேதுறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக ரயில் பயணங்களின்போது நிகழும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் அதுகுறித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டுமெனில் தன் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு அருகில் இருக்கும் ரயில்வே காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அல்லது தான் சேர வேண்டிய இடத்துக்குச் சென்றடைந்த பிறகு அங்குள்ள ரயில்வே காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

இதனால் கால விரயம் ஆவதுடன் வீண் சிரமங்களும் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க குற்றச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பயணியின் பயணம் தடைபடாதவாறு ரயில்வே ஆபத்துக்கால உதவி எண் 1322ல் புகார் பெறப்பட்ட உடனே, ஓடும் ரயிலிலேயே காவல்துறையினர் அந்தக் குற்றச் சம்பவம் குறித்து மூன்று பிரதியாக‌ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். அவற்றில் ஒரு பிரதியை அங்கேயே பயணியிடம் வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.சக்ஸேனா மற்றும் ராகேஷ் வஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் ஆபத்துகால எச்சரிக்கை பொத்தான் ஒன்றை அமைக்க வேண்டும். ரயில்வே போலீஸ் (ஜி.ஆர்.பி.) படையினருக்கு வழங்கப்பட்டுள்ள எடை அதிகம் உள்ள 303 ரக துப்பாக்கிக்குப் பதிலாக எடை குறைவான நவீன ரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x