Published : 24 Jan 2015 09:45 AM
Last Updated : 24 Jan 2015 09:45 AM

தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாளை மாநில அளவில் நடைபெறும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேர்தல் துறை இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

ஜனநாயக தேர்தல் முறைகளில் குடிமக்கள் தங்கள் பங்களிப்பை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக, இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தனது நிறுவன நாளான ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஐந்தாவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் மையநோக்காக ‘சுலபமான பதிவு; சுலபமான திருத்தம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டங்களுக்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநில அளவிலான விழா தமிழக ஆளுநர் ரோசய்யா தலைமையில், 25-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும். இதில் ஆளுநர் ரோசய்யா தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்கவைத்து சிறப்புரையாற்றுவார்.

சிறப்பாகத் தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கு விருது வழங்குவதுடன், புதிதாக பதிவு செய்த வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையும் வழங்கப்படும். இதில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டாக்டர். சோ. அய்யர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்குவர்.

மாவட்ட அளவிலும் விழாக்கள் நடைபெறும். தலைமைச் செயலகத்தில் நேற்று அரசு அலுவலர்கள், வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதேபோல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரும் 26-ம் தேதி நடைபெறும் கிராம சபைக்கூட்டங்களிலும் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்படும்.

சட்டத்துக்குப் புறம்பான தூண்டுதல்களுக்கு ஆட்படாமல் கண்ணியத்துடன் மனசாட்சிப்படி வாக்களித்தல் மற்றும் வாக்காளர் பங்கேற்பை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக அமைப்புகள், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவை தேசிய வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்காக முழுமையான ஆதரவு தர வேண்டும்.

மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சி, www.elections.tn.gov.in இணையதளத்தில் காலை 10.55 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x