பொது விநியோக முறையில் வழங்கப்படும்: சர்க்கரை விலை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் - மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

பொது விநியோக முறையில் வழங்கப்படும்: சர்க்கரை விலை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் - மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
Updated on
1 min read

பொது விநியோக முறையில் ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரை விலையை நிர்ணயித்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

வெளிச் சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்தபோதும், கடந்த 2002-ம் ஆண்டு முதல் ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.13.50 ஆக இருக்கிறது. இனி மாநில அரசுகளே இந்த விலையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடிவு எடுக்கலாம். இது தொடர்பான யோசனைக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

ரேஷன் கடைகளில் சர்க்கரையை விநியோகிப்பதற்காக மாநில அரசுகள் கிலோ ரூ.32-க்கு கொள்முதல் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. விற்பனை விலை ரூ.13.50 போக மீதமுள்ள ரூ.18.50-ஐ மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.

விலையை மாநில அரசுகளே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டாலும், இந்த மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், விலையைக் குறைத்தால் கூடுதல் செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. பொது விநியோகத்துக்கு தேவையான சர்க்கரையை வெளிச் சந்தையில் வாங்கிக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.

சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்படுவதற்கு முன்பு சர்க்கரை ஆலைகள் தமது உற்பத்தியில் 10 சதவீதத்தை சந்தை விலையைவிட குறைவாக அரசுக்கு கொடுப்பது கட்டாயம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வெளிச் சந்தையில் சர்க்கரை விலை ரூ.35 ஆக உயர்ந்த நிலையில், கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சில மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இல்லாவிட்டால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தன. பொது விநியோகத்துக்காக 28 லட்சம் டன் சர்க்கரை தேவைப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in