Published : 29 Jan 2015 08:49 AM
Last Updated : 29 Jan 2015 08:49 AM

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளும் விளம்பரங்களுக்கு தடை: கூகுள், யாகூ நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கும்படி கூகுள், யாகூ, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்வதும், அதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவிப்பதும் பாலினத்தை முடிவு செய்தல் தடைச் சட்டம், 1994 - ன் படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால், உலகின் பிரபல கணினி தேடு பொறிகளான கூகுள், யாகூ, மைக்ரோசாஃப்ட் இணைய பக்கங்களில் இதுகுறித்த விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.

இதை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்வது இந்தியாவில் சட்டப்படி குற்றம். ஆனால், கூகுள் உள்ளிட்ட தேடு பொறிகள் அதுதொடர்பான விளம்பரத்தை அனுமதிப்பதால், இந்தியாவில் இத்தகைய குற்றச்செயல் மறைமுகமாக நடந்து வருகிறது. இதனால், கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் என்றிருந்த எண்ணிக்கை, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 914 ஆக சரிந்துள்ளது. எனவே, கூகுள் உள்ளிட்ட தேடு பொறிகளில் இத்தகைய விளம்பரங்களுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதில் தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் அடங்கியிருப்பதால், நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய தகவல் தொடர்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘கூகுள், யாகூ, மைக்ரோசாஃப்ட் தேடு பொறிகள் நினைத்தால், இத்தகைய விளம்பரங்களை தடை செய்ய முடியும். அவர்களுக்கு அத்தகைய தொழில்நுட்ப வசதி உண்டு. எனவே, இந்தியாவில் இத்தகைய விளம்பரங்கள் அவர்களது இணைய பக்கங்களில் இடம்பெறாத வகையில் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது தொடர்பான விளம்பரங்களை கூகுள், யாகூ, மைக்ரோசாஃப்ட் ஆகிய தேடு பொறிகள் உடனே தடை செய்ய வேண்டும். இத்தகைய விளம்பரங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று அவர்களது கொள்கை முடிவு பக்கத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2001-ம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் இருந்தன. 2011-ல் இது 914 ஆக சரிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x