Published : 01 Jan 2015 02:24 PM
Last Updated : 01 Jan 2015 02:24 PM

டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்கான செல்பேசி செயலி சேவை அறிமுகம்

தலைநகர் டெல்லியில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 'ஹிம்மத்' என்ற செல்பேசி செயலி (மொபைல் அப்ளிகேஷன்) சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த செல்பேசி செயலி சேவையை டெல்லி போலீஸார் உருவாக்கியுள்ளனர்.

இந்த சேவை குறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பெண்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தாங்கள் ஏதாவது இக்கட்டான சூழலில் சிக்கிக்கொள்ளும்போது செல்பேசியின் பவர் பொத்தானை அழுத்தினால் 30 விநாடிகளுக்கு ஆடியோ, வீடியோ பதிவாகும்.

இதை பயன்படுத்தி காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாக தகவல் அளிக்க முடியும். இதில் செயலியுடன் தங்களுக்கு நெருக்கமான 5 பேரது தொலைபேசி எண்களை இணைத்துக் கொள்ள வசதி உள்ளது.

எனவே, அவசர உதவி அழைப்பு மேற்கொள்ளும்போது 5 பேருக்கும் குறுந்தகவல் செல்லும். இதன்மூலம் போலீஸார் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களும் அவருக்கு உதவிக்கரம் நீட்ட வாய்ப்பு ஏற்படும்" என்றார்.

டெல்லியில் அண்மையில் பணி முடிந்து கால் டாக்ஸியில் வீடு திரும்பிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு சற்றும் இல்லை என அரசியல் கட்சிகள் சாடின. இத்தகைய சூழலில், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 'ஹிம்மத்' என்ற கைபேசி செயலி சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x