Published : 01 Jan 2015 06:49 PM
Last Updated : 01 Jan 2015 07:40 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அருமையாக ஆடி வரும் இந்திய கேப்டன் விராட் கோலியை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை ஆஸ்திரேலியா வகுத்துள்ளது.
இதுவரை 3 சதங்களுடன் 499 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலியின் சராசரி 83 என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவியூகம் பற்றி ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கூறும் போது, “இந்திய வீரர்கள் எப்படி ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக வியூகம் வகுக்கிறார்களோ அதேபோல் விராட் கோலியைக் கட்டுப்படுத்தி வீழ்த்த புதிய வியூகம் அமைப்போம்.
அதாவது அவரை ஸ்ட்ரைக்கில் வைத்து ரன்கள் கொடுக்காமல், அவரது சுதந்திர ரன் குவிப்பை கட்டுப்படுத்தி, ஆட்டத்தை அவருக்கே சோர்வாக மாற்றி அவரைத் தவறு செய்ய வைப்போம்.
அடிலெய்ட் மற்றும் மெல்போர்னில் அவர் ரன்களை குவித்துள்ளார். அவரது விக்கெட்டை வீழ்த்துவதே எங்களுக்கு முக்கியம். அவரை நெருக்கி வீழ்த்திவிட்டால் பிறகு மளமளவென அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து விடும்.
கோலி வேகமாக ரன்களை எடுக்க விரும்புவார். சுதந்திரமாக ஆட விரும்புவார். எனவே அவரை நீண்ட நேரத்திற்கு ரன் எடுக்க முடியாமல் கட்டிப்போட்டுவிட்டால் அவர் ஒரு மோசமான ஷாட் தேர்வைச் செய்து விடலாம். அதற்கான வாய்ப்பு அவரிடம் உள்ளது” என்று கூறியுள்ளார்ர் ஜோஷ் ஹேசில்வுட்