

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் மறைமுகமாக உதவுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், "எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எவ்வித தடையுமின்றி ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் மறைமுக உதவுகிறது. எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவது திசை திருப்பும் முயற்சியே" என்றார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத், எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அத்துமீறல்கள் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காகவே என குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே சுமார் 60 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைமை இயக்குநர் ராகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "50 முதல் 60 தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வுக்குள் ஊடுருவுவதற்காக எல்லையில் காத்திருக்கிறார்கள். ஊடுருவும் முயற்சி நிறை வேறாததால் விரக்தி அடைந்த பாகிஸ்தான், சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
உள்நாட்டு பிரச்சினை வெடிக்கும்போதெல்லாம் சொந்த நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது அங்கு தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. இதனால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான், எல்லையில் தாக்குதலை தொடங்கி உள்ளது" என்றார்.