சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூரிடம் தனிப்படை விசாரணை - 8 மணி முதல் நள்ளிரவு வரை நடந்தது
விஷம் கொடுத்து சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர், விசாரணைக்காக டெல்லி வசந்தவிஹார் காவல்நிலையத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
சசி தரூரின் 3-வது மனைவி சுனந்தா புஷ்கர்(51). இவர் கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இரவு, டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட் டுள்ளார் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும் ‘நட்பு’ இருப்பதாக, கொல்லப்படுவதற்கு ஒருநாள் முன்பாக சுனந்தா குற்றம்சாட்டியிருந்தார்.
இக்கொலை வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக, சசி தரூருக்கு டெல்லி போலீஸார் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், கேரளத்தில் இருந்து நேற்று பிற்பகல் டெல்லி வந்த சசி தரூர், தனது இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு தெற்கு டெல்லியில் உள்ள வசந்த விஹார் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். வசந்த விஹார் காவல் நிலையத்தில் துணை ஆணையர் பிரேம்நாத், கூடுதல் துணை ஆணையர் குஷ்வாஷ், முதுநிலை இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் சிங், விசாரணை அதிகாரி விகேபிஎஸ் யாதவ் உள்ளிட்டோர் அடங்கிய குழு அவரிடம் விசாரணை நடத்தியது.
இக்குழு 50-க்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயார் செய்து வைத்திருந்தது. இரவு 8 மணிக்கு மேல் அவரிடம் விசாரணை தொடங்கியது. நள்ளிரவு வரை நடந்தது.
தரூரை கேள்விகளால் துளைத்தெடுத்த போலீஸார் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரிடம் மூன்று சுற்றுக்கள் விசாரணை நடைபெறும் என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடை யவர்கள் யாராக இருப்பினும், யாரிடம் தகவல் இருப்பினும் அவர் களிடம் விசாரணை நடத்தப்படும் என டெல்லி காவல்துறை ஆணை யர் பாஸி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி திருவனந்தபுரம் - டெல்லி விமான பயணத்தின்போது, சுனந்தாவுக்கும் தரூருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட தாகவும், விமான நிலையத்தில் காருக்குள் இழுக்க முயன்ற தரூரை சுனந்தா அறைந்ததாகவும் தகவல் வெளியானது. அப்போது அந்த விமானத்தில் முன்னாள் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை ஆணையர் பாஸி தெரிவித்துள்ளார்.
சுவாமியின் குற்றச்சாட்டு
இக்கொலை வழக்கில் தன்னைச் சிக்கவைக்க போலீஸார் முயற்சி செய்வதாகவும், இதற்காக தங்கள் வீட்டு பணியாளரை போலீ ஸார் அடித்து மிரட்டுவதாகவும் சசி தரூர் குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டை டெல்லி போலீஸார் மறுத்தனர்.
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறும்போது, “தரூர் ஒரு பொய்யர். அவர் சுனந்தாவைக் கொல்ல வில்லை. ஆனால் கொன்றது யார் என தரூருக்குத் தெரியும். தரூரை சிறையில் அடைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
“சுப்பிரமணியன் சுவாமிக்கு கொலையாளி யார் எனத் தெரிந்தால், டெல்லி போலீஸா ரிடம் தெரிவிக்கட்டும்” என தரூர் பதில் அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
