

ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இலங்கையின் புதிய அதிபர் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்துள்ளார்; அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வி முகம் கண்டுள்ளார். இதைத் தொடர்ந்து இலங்கை அதிபராக மைத்ரி பால சிறிசேன இன்று மாலை கொழும்புவில் பதவியேற்கவுள்ளார் என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
'' ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இலங்கையின் புதிய அதிபர் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இலங்கை நமது அண்டை நாடாக உள்ளது. அண்டை நாட்டுடன் இணைந்துதான் நாம் செயலாற்ற முடியும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்களை அமல்படுத்த புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்வரவேண்டும் '' என்று வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில், 13-வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில், வடக்கு, வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்க வேண்டுமென இந்திய அரசு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.