Published : 23 Jan 2015 10:42 AM
Last Updated : 23 Jan 2015 10:42 AM

கேரள பாஜக உறுப்பினர் எண்ணிக்கை 4 மடங்காகும்: ஹெச்.ராஜா தகவல்

நாடு முழுவதும் ஜனவரி முதல் தேதி தொடங்கிய பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகி றது.

இதுகுறித்து கேரளம் மற்றும் லட்சத் தீவுக்கான பாஜக மேலிட பார்வையாளரும் அக்கட்சியின் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா கூறியதாவது:

தமிழக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தான் கேரளத் தின் மக்கள் தொகை. தமிழகத்தில் சுமார் 60 ஆயிரம் வாக்குச் சாவடி கள் உள்ளன. கேரளத்தில் 21,424 வாக்குச் சாவடிகளும் 140 சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன. வரும் செப்டம்பரில் கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலத்தில் உறுப்பினர் சேர்க்கையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.

இம்முறை பஞ்சாயத்து தலைவர் பதவிக்குக்கூட வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தேசிய தலைவர் அமித் ஷா எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு முழு நேர ஊழியர் வீதம் நியமிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறோம். கேரளத்தில் பாஜக உறுப்பினர்களின் முந்தைய எண்ணிக்கை சுமார் 4.7 லட்சம். இது கடந்த 20 நாட்களில் 7 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 20 நாட்களில் 2.3 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக தினமும் சராசரியாக 30 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருவதால் இந்த மாத இறுதிக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டி விடும். மார்ச் 31-ம் தேதிக் குள் கேரள பாஜக உறுப்பினர் களின் மொத்த எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் நான்கு மடங்காக இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் பாஜக-வில் சேர்ந்து வருகிறார்கள். கடந்த 20-ம் தேதி, மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகர் ஏ.கே.கோபாலனின் சொந்த ஊரான கண்ணூர் மாவட்டம் பேரளச்சேரியிலிருந்தே 200 கம்யூனிஸ்ட் தோழர்கள் பாஜக-வில் சேர்ந்திருக்கிறார்கள். அந்தளவுக்கு கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x