Last Updated : 27 Jan, 2015 05:44 PM

 

Published : 27 Jan 2015 05:44 PM
Last Updated : 27 Jan 2015 05:44 PM

மோடியிடம் மெகாலோமேனியா- சூட் சர்ச்சையில் காங்கிரஸ் விமர்சனம்

ஒபாமாவுடனான சந்திப்பின்போது மோடி அணிந்திருந்த சூட் குறித்த சர்ச்சை பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், 'இது மெகாலோமேனியாவின் பிரதிபலிப்பே தவிர, வேறொன்றும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆடை அணிவதில் மோடி செலுத்தும் கவனத்தை வெளிநாட்டு ஊடகங்களும் பாராட்டுவதுண்டு. இந்நிலையில், நேற்று முன் தினம் ஒபாமாவை மோடி சந்திக்கும் போது, இளஞ்சிவப்பில் மெல்லிய கோடுகள் கொண்ட சூட் அணிந்திருந்தார்.

பிரதமரின் படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும்போது, இளஞ் சிவப்பு கோடுகள் முழுவதும் 'நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த குளோசப் படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவின. கூடவே கிண்டல் செய்தும் பதிவுகள் வெளியாகின. ஒபாமாவை டெல்லி விமான நிலையத்தில் குர்தா மற்றும் சால்வை அணிந்து வரவேற்ற மோடி, பின்னர் ஒபாமாவை இரண்டாவது முறையாக சந்திக்கும்போது இந்த ஆடை அணிந்திருந்தார்.

மோடியின் இந்த சூட் விவகாரம் இன்னும் சூடு தணியாமல் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ""சுத்தப் பைத்தியக்காரத்தனம் இது; மெகாலோமேனியாவைத் தவிர (தன்னைத்தானே உயர்வாக எண்ணிக் கொள்ளுதல்) தவிர வேறெதுவுமில்லை" என்று ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அந்தப் பதிவில், 'மோடியின் குர்தா எல்லோரையும் வசீகரித்திருக்கலாம்; ஆனால், மோடியின் சூட் எரிச்சலூட்டுகிறது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறும்போது, "மோடியின் சூட்-டில் அவர் பெயர் எம்பிராய்டரி செய்யப்பட்டது உண்மையெனில், முதன் முதலாக அதிச்சியூட்டுகிற, வெளித்தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சுய பிரகடனத்தின் உச்சமாக இது இருக்கும்" என்று ட்வீட்டியிருக்கிறார்.

மோடியின் சூட்-டைத் தைத்தது அகமாதாபாத்தைச் சார்ந்த 'ஜேட் புளூ' நிறுவனம் என்று கூறப்படுகிறது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கி இந்நிறுவனம்தான் அவரின் வார்ட்ரோபை அலங்கரித்திருக்கிறது.

உலக அளவில் பிரபலமான 'மோடி குர்தா'வை வடிவமைத்தது இதன் உரிமையாளர் பிபின் செளகான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடையில் பெயர் பொறித்துக்கொண்ட முதல் தலைவர் அல்ல மோடி. இதற்கு முன் முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது ஆடை கோடுகளில் தனது பெயரை பொறித்துக்கொண்டுள்ளார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x