ஜெ. வழக்கை அரசியலாக்கினால் நடவடிக்கை: திமுகவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

ஜெ. வழக்கை அரசியலாக்கினால் நடவடிக்கை: திமுகவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Updated on
1 min read

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அரசியலாக்கி, இழுத்தடிக்க வேண்டாம் என திமுக வழக்கறிஞருக்கு கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து அரசு வழக்க றிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என்று திமுக‌ பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் ஆஜரானார். "சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தொடர்ச்சியான செயல்பாடுகள் ஆட்சேபத்திற்குரிய வகையில் இருக்கிறது. அவருடைய வாதம் திருப்திகரமாக‌ இல்லை" என்றார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி குமாரசாமி, "பவானி சிங் கர்நாடக அரசின் உத்தரவின் பேரிலேயே வழக்கில் ஆஜராகியுள்ளார். விசாரணை நியாயமான முறையிலேயே நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையை 3 மாத காலத்திற்குள் முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது நினைவிருக்கிறதல்லவா? மனு விசாரணையை அரசியலாக்கி, இழுத்தடித்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 345-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும்" என எச்சரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in