Published : 13 Jan 2015 10:32 AM
Last Updated : 13 Jan 2015 10:32 AM

காஸ் மானியத்தை கைவிட வேண்டும்: தினமும் ஒருவரிடம் போனில் கோரிக்கை வைக்கும் அமைச்சர்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை கைவிடுமாறு முக்கியப் பிரமுகர்களுக்கு மத்திய இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக தினமும் ஒரு முக்கிய பிரமுகருடன் தொலைபேசியில் பேசி வருகிறார்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே பல வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வரு கிறார்கள். இந்த வகையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒவ்வொரு நாளும் ஒரு முக்கிய பிரமுகரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை கைவிடும்படி கோரிக்கை வைக்கிறார்.

இவர் முதல் முறையாக மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இந்தக் கோரிக்கையை வைத்தார். இதையடுத்து, mylpg.in எனும் இணையதளத்தில் மானியம் வேண்டாம் என்று ஜேட்லி பதிவு செய்துள்ளார்.

இந்த வரிசையில் மத்திய நிலக்கரி மற்றும் எரிசக்தித் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆகியோரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை கைவிட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக பல எம்பிக்களை தொடர்புகொண்டு பேசி வரும் பிரதான், நேற்று முன்தினம் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உபி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவையும் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நம் நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களும் அதிக வருமானம் ஈட்டுபவர்களும் தாமாக முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தைக் கைவிட வேண்டும். மானியத்தின் பலன் ஏழைகளுக்கு கிடைக்கும் நிலை உருவாக வேண்டும். எனது கோரிக்கையை ஏற்று பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மானியத்தை கைவிட்டுள்ளனர். இதற்காக தொடர்ந்து தினமும் ஒரு முக்கியப் பிரமுகரிடம் பேசி வருகிறேன்” என்றார்.

தற்போது மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. 14.2 கிலோ எடையுள்ள இதன் விலை டெல்லியில் ரூ. 417.00. கூடுதல் சிலிண்டர் தேவைப்படுவோர் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம். இப்போது மானியம் இல்லாத சிலிண்டர் ரூ.708.50 பைசாவுக்கு கிடைக்கிறது.

5 கிலோ எடையுள்ள சிலிண்டர் மானிய விலையில் ரூ.155-க்கும் சந்தை விலையில் ரூ.351-க்கும் கிடைக்கிறது. சமையல் எரிவாயு மானியத்துக்காக கடந்த ஆண்டு அரசு ரூ.46,458 கோடி வழங்கி உள்ளது. மானியத்தை கைவிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அடுத்த வருடம் அரசின் மானிய சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x