

நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை, கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4-ல் இருந்து 14.2 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள்தொகை கணக்கெடுப் பில், மதவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கை விரைவில் வெளி யிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றுமுன் தினம் கூறியிருந்தார். இந்நிலையில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. தேசிய சராசரி 18 சதவீதத்தில் இருந்து கடந்த 2001 - 2011-ம் ஆண்டுகளில் முஸ்லிம் களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் மொத்த இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநில வாரியாக பார்க்கும் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 68.3 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அடுத்த நிலையில் அசாம் (34.2), மேற்குவங்கம் (27) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் வங்கதேசத்தில் இருந்து கடந்த 30 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானோர் குடியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அசாமில் அதிகரித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அசாம் மாநில மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 30.9 சதவீதம் இருந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 34.2 ஆக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு 8.8 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தவிர உத்தராகண்ட் மாநிலத்தில் 11.9 சதவீதத்தில் இருந்து 13.9 சதவீதமாகவும் கேரளத்தில் 24.7-ல் இருந்து 26.6 ஆகவும் கோவாவில் 6.8 சதவீதத்தில் இருந்து 8.4 ஆகவும் ஹரியாணாவில் 5.8-ல் இருந்து 7 சதவீதமாகவும் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.