Last Updated : 13 Jan, 2015 04:59 PM

 

Published : 13 Jan 2015 04:59 PM
Last Updated : 13 Jan 2015 04:59 PM

நான் ஒரு மார்க்ஸியவாதி- தலாய் லாமாவின் புதிய பார்வை

’மார்க்ஸியத் தத்துவத்தில் சமத்துவம் வலியுறுத்தப்படுகிறது, எனக்கு இது மிக முக்கியமானது’ என்று திபெத்திய பவுத்தத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் பிரசிடென்சி பல்கலைக் கழகத்தில் உலக சமாதனம் பற்றிய சொற்பொழிவு ஆற்றுகையில் தலாய் லாமா தான் ஒரு மார்க்ஸியர் என்று கூறினார்.

“சமூக-பொருளாதார கோட்பாட்டைப் பொறுத்தவரையில், நான் இன்னமும் ஒரு மார்க்ஸியர்தான். தற்போது பல மார்க்ஸியர்கள் சிந்தனையில் முதலாளித்துவவாதிகளாக உள்ளனர்.

முதலாண்மை நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மிகப் பெரியது. மார்க்ஸிய தத்துவத்தில் வளங்களின் சம விநியோகம் வலியுறுத்தப்படுகிறது. இது என்னைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதாகும்” என்றார் தலாய் லாமா.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கடைபிடிக்கப்படும் பாகுபாடு, மற்றும் சாதிப் படிமுறை அமைப்புகள் அமைதியைக் குலைக்கின்றன என்று கூறிய தலாய் லாமா, “பாகிஸ்தானில் உள்ள ஷியாக்களை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்” என்றார்.

“முந்தைய நூற்றாண்டு வன்முறைக்கான நூற்றாண்டாக அமைந்தது. இந்த நூற்றாண்டை நாம் உரையாடலுக்கானதாக மாற்றினால் இது அமைதி மற்றும் சமாதானத்திற்கான நூற்றாண்டாக மாறும். என்னுடைய வாழ்நாளில் நான் இதனைக் காணமுடியும் என்று கருதவில்லை. ஆனால் சமாதானம் மற்றும் அமைதியை நோக்கி நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். 30-வயதுக்குட்பட்டோர்தான் 21ஆம் நூற்றாண்டின் தலைமுறையினர் ஆவர். வன்முறையை உங்கள் உறுதிப்பாடு, பார்வை மற்றும் அறிவினால் நிறுத்த வேண்டும்” என்று கூறிய தலாய் லாமா, அணு ஆயுதங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றார்.

ஒரு மாணவர் எழுந்து அவரது நூலின் தலைப்பு (Freedom in Exile) என்ன அறிவுறுத்துகிறது என்று கேட்டார். அதற்கு அவர் பதில் அளிக்கும் போது, “நான் 16 வயதில் புகலிடம் நோக்கி ஓடத் தொடங்கினேன், என் சுதந்திரத்தை இழந்தேன், என் நாட்டை இழந்தேன்.

இன்று இந்தியாவில் சுமார் 1,00,000 பேர் என் வழியில் பயணிக்க வந்துள்ளனர். இங்கு நிறைய தரப்பு மனிதர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பல்வேறு சமய பின்னணிகள் கொண்டவர்களைச் சந்தித்து உரையாடி வருகிறேன். பலதரப்பட்ட மரபுகளின் தலைவர்களை சந்தித்து வருகிறேன்.

இதனால்தான் இந்தியா ஒரு சுதந்திர நாடு என்கிறேன். நானும் முழுச் சுதந்திரத்துடன் செயல்படுகிறேன். இதுதான் ஃப்ரீடம் இன் எக்சைல் என்ற என் நூலின் அர்த்தம்.” என்றார் தலாய் லாமா.

பண்டைய இந்திய தத்துவத்தின் தூதுவர் என்று தன்னை அழைத்துக் கொண்ட தலாய் லாமா, இந்தியா என்பது குரு, மக்கள் அதன் சிஷ்யர்கள் என்றார்:

"சிஷ்யர்களான நாங்கள் நம்பத்தகுந்தவர்கள். குருவின் ஞான பாரம்பரியத்தை நாம் ஆயிரம் ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம். இப்போது மக்களின் ஞானம் குருவின் ஞானத்தைவிட சிறந்ததாகியுள்ளது.” என்ற தலாய் லாமா, உலக அமைதிக்காக ஒன்றுபடுவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x