

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தங்களை மீண்டும் குடியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த 1990-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிட்கள் வெளியேறினர். தாங்கள் வெளியேறி 25 ஆண்டுகள் முடிந்ததைக் குறிக்கும் வகையில் பண்டிட்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் காஷ்மீர் பண்டிட்களின் கூட்டமைப்பான பனுன் காஷ்மீர் தலைவர் அஷ்வனி குமார் க்ருங்கூ நேற்று பேசியதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடிப் படைவாதிகளும் தீவிரவாதிகளும் பண்டிட்கள் மீது கொடூரமாக இனவெறி தாக்குதல் நடத்தினர். பண்டிட் இனத்தை அழித்தொழிப் பதற்காக அவர்களை படுகொலை செய்தனர்.
இதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான பண்டிட்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பண்டிட் இனத்தை ஒதுக்கி வைப்பதற்காகவே அடிப்படைவாதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களை மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மறு குடியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அதேநேரம், அரசியல் மற்றும் சட்ட ரீதியாக மார்கதர்ஷன் தீர் மானத்தை செயல்படுத்த உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் அப்பகுதிக்கு மீண்டும் திரும்பு வோம். மேலும் கோயில்கள் மற்றும் தர்காக்கள் மசோதாவை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் பண்டிட்களின் அனைத்து கட்சி ஒருங்கிணைப்புக் குழுவினர் டெல்லி ஜந்தர் மந்தரிலும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.