

உத்தரப் பிரதேசத்தில் கோயில் கருவறையில் விதிகளை மீறி ஏழு வெளிநாட்டவர்களை அனுமதித்த பூசாரிக்கு ரூ.1.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரா அருகிலுள்ள பிருந்தா வனில் அமைந்துள்ளது பாங்கே பிஹாரி கிருஷ்ணர் கோயில். இக்கோயிலின் கருவறையில் அதன் பூசாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் தவிர வேறு எவருக்கும் அனுமதி இல்லை. இந்த சூழலில் அந்தக் கோயிலின் பூசாரிகளுள் ஒருவரான சுமித் கோஸ்வாமி கடந்த ஜனவரி 13-ம் தேதி 7 வெளிநாட்டவர்களை அனுமதித்ததாக, தலா ரூ.20,000 வீதம் ரூ.1.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் அக்கோயில் நிர்வாக தலைவரான நந்துகிஷோர் உபமன்யூ கூறும் போது, “கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அங்கு சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைக்கூட கருவறையில் அனுமதிக்கவில்லை. இந்நிலை யில், வெளிநாட்டவரை அனுமதிப் பதற்காக சுமித் பணம் வாங்கியது சிசிடிவி கேமிரா பதிவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அதற்கு உரிய பதில் கிடைக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்த அபராதத் தொகையை ஒருவாரத்துக்குள் சுமித் செலுத்த வேண்டும். தவறினால், அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதுடன், கோயில் சார்பில் சுமித்துக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உ.பி.யின் தெய்வீக நகரமான மதுரா, கிருஷ்ணரின் ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது. இதனால், அங்கு கிருஷ்ணனின் பெயரில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அமைந்துள்ளன. அதில், 1862-ல் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயிலான பாங்கே பிஹாரி மிகவும் பிரபலமானது. இதனால் அங்கு வரும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ அமைப்பின் பக்தர்கள் அதிகம்.
இதற்கு முன்பும் ஒருமுறை அக்கோயிலின் கிருஷ்ணன் சிலைக்கு ஜீன்ஸ், தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் அணிவித்து பூஜை செய்து போட்டோ எடுக்க, அதன் பூசாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.