

“எனது மகன் தீவிரவாத இயக்கத் தில் சேர முயற்சிக்கவில்லை” என்று ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட பொறியாளரின் தந்தை போலீஸாரிடம் மன்றாடி வருகிறார். ஹைதராபாத் ஆசிப் நகரை சேர்ந்தவர் சல்மான் முயாசுதீன் (22). இவர் அமெரிக்காவில் பொறியியல் மேற்படிப்பு முடித்துள்ளார்.
இவர் கடந்த வியாழக்கிழமை இரவு அமெரிக்காவில் இருந்து தனது காதலியுடன் ஹைதராபாத் வந்தார். இந்நிலையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ளதாக கூறி விமான நிலையத்தில் முயாசுதீனை சைபராபாத் போலீஸார் கைது செய்தனர். இவர் ஐஎஸ் அமைப்புடன் ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் தொடர்பு வைத்திருப்பதாக போலீஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சல்மான் முயாசுதீன் போலீஸாரிடம், “என்னைப் போன்று பலர் ‘தவுலான் நியூஸ்’ எனும் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் இணைந்துள்ளனர். விசா முடிந்ததால் என்னை அமெரிக்காவில் இருந்து அனுப்பி விட்டனர். இதனால் துபாய்க்கு சென்று, அங்கு காதலியை திருமணம் செய்துகொண்டு, பின்னர் வேலைக்காக சிரியா செல்ல திட்டமிட்டுள்ளேன். எனக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை” என்று கூறியதாகத் தெரிகிறது.
முயாசுதீனின் தந்தையும் ஓய்வுபெற்ற பொறியாளருமான அகமது மொய்னுதீன், “என் மகனுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் போலீஸார் வீணாக சந்தேகத்தின் பேரில் என் மகனை கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர்” என்று போலீஸ் அதிகாரிகளிடமும் தங்கள் உறவினர்களிடம் கூறி வருகிறார்.
ஆனால் போலீஸார் முயாசுதீனின் லேப்-டாப்பை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.