

நாடு முழுவதும் உள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் பொருட்டு நடத்தப்பட்டு வந்த கள ஆய்வுப் பணியில் சில ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மத்தியில் புதிய அரசு அமைந்தபின் அதன் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் இப்பணி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
நாட்டின் பல இடங்களில் கோட்டைகள், கோயில்கள், கோயில்களை சார்ந்த அரும் பொருட்கள், சிலைகள், சிற்பங்கள், செப்புப் பட்டயங்கள், செப்புத் திருமேனிகள், தூண்கள், ஊர் இருக்கைகள், மண்ணுக்கடியில் கிடைத்த அரும்பொருட்கள், மட்பாண்டங்கள் என நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட பொருட்கள் தொல்பொருட்ளாக கருதப்படுகின்றன.
இவற்றை கண்டுபிடித்து ஆவணப்படுத்துவதற்காக இந்திய தொல்பொருள் ஆய்வகம் மேற்கொண்டுவந்த கள ஆய்வுப் பணி, கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து பல மாநிலங்களில் நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டது. இதற்கு அந்த அலுவலகத்தில் நிலவிய ஆள் பற்றாக்குறை காரணமாகக் கூறப்பட்டது.
நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் 27 வட்ட அலுவலகங்களில் காலியாக இருந்த 170 உதவி ஆய்வாளர் பதவிகளில் தற்போது 56 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. எனவே மத்திய கலாச்சாரத்துறை அமைச்சக உத்தரவின் பேரில் அந்தக் கள ஆய்வு மீண்டும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் தொல்பொருள் ஆய்வக அதிகாரிகள் கூறும்போது, “தொல் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொய்வடைந்தால் அவைவெளிநாடுகளுக்கு கடத்தப்படு வதும், அழிந்து போவதும் அதிகமாகி விடும். இது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த அக்டோபரில் விரைவுபடுத்தப்பட்ட கள ஆய்வு, இதுவரை 800 கிராமங்களில் நடத்தப்பட்டு விட்டது” என்றனர்.
நாடு முழுவதும் நடந்து வரும் இந்தக் கள ஆய்வு, ஆண்டுக்கு 1000 கிராமங்கள் என 5 ஆண்டுகளில் 5000 கிராமங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதியில் உள்ள தொல்பொருள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்தக் கள ஆய்வுக்கு உதவியாக இருந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் அனுபவங்களை வளர்த்துக்கொள்ளவும் இந்தக் கள ஆய்வு உதவியாக இருந்து வருகிறது.
காஞ்சியுடன் நின்று போன பதிவு
தொல்பொருள் ஆய்வகத்தின் கள ஆய்வு ஒருபுறம் நடந்து வந்தாலும், அவ்வப்போது கண்டு பிடிக்கப்படும் தொல்பொருள் ஆவணங்கள், மாநில அரசால் நியமிக்கப்பட்ட பதிவு அதிகாரியின் மூலமாகவும் ஆவணப்பதிவு செய்யப்பட்டு வந்தது. இவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டு விட்டதால் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இப்பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, “இப்பணியும் தொடர வேண்டும் என மாநிலங்கள் சார்பில் கோரிக்கை வந்தால் மீண்டும் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் தொல்பொருள் சம்மந்தப்பட்ட பிரச்சினையில் பல மாநில அரசுகள் அதிக அக்கறை காட்டுவதில்லை” என வருத்தம் தெரிவித்தனர்.
இதேபோல், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் இந்தத் துறைக்கு ஜெக்மோகன் அமைச்சராக இருந்தபோது, தொல்பொருள் சின்னங்கள் மற்றும் புராதனப் பொருட்களை ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.
அதன் சார்பில் 5 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட ரூ. 50 கோடி நிதியுதவியுடன் இப்பணி நடைபெற்று வந்தது.தொல்பொருள் மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டு வந்த இந்த திட்டமும் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.