

உத்தரப் பிரதேச போலீஸ் நிலையத்தில் 17 வயது மாணவியை போலீஸ்காரர் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பதான் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த 15-ம் தேதி மாலை டியூசனுக்கு சென்றார். அப்போது அந்த மாணவியை வழிமறித்து மிரட்டிய போலீஸ்காரர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மாடிக்கு அழைத்துச் சென்று மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து அலறியதால் அவரை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பலத்த காயமடைந்த மாணவியை பரேலியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவியின் கை, கால், இடுப்பு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பரேலி டிஐஜி ரத்தோர் கூறியபோது, “முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.