

உத்தரபிரதேசத்தில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் ஏராளமான கடைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அலகாபாத் உயர்நீதிமன்றக் கிளையை மொரதாபாத்தில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மொரதாபாத் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைத்துக் கடைகளையும் வலுகட்டாயமாக மூடச்செய்தனர்.
பல கடைகளில் உள்ள பொருட்களை சூறையாடிய வழக்கறிஞர்கள் கடை ஊழியர்களையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் நீண்ட நேரம் வன்முறையில் ஈடுபட்டபோதும் போலீஸார் யாரும் அதனைத் தடுக்க முன்வரவில்லை என வியாபாரிகள் புகார் கூறினர்.
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய வழக்கறிஞர்களே வன்முறையில் ஈடுபட்டது வியாபாரிகளை மட்டுமல்லாது, பொதுமக்களையும் அதிருப்தி அடையச் செய்தது.