Last Updated : 25 Jan, 2015 09:29 AM

 

Published : 25 Jan 2015 09:29 AM
Last Updated : 25 Jan 2015 09:29 AM

சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: அரசு வழக்கறிஞர் பவானி சிங் ராஜினாமா - குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஐஜி குணசீலனிடம் அவர் அளித்துள்ளார்.

இதனிடையே அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை சமாதானப்படுத்தும் முயற்சியில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இறங்கியுள்ளனர். ராஜினாமாவை வாபஸ் பெறுவது தொடர்பாக பவானி சிங்கிடம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில் தனிஅறையில் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 2005-ம் ஆண்டு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.அப்போது இவ்வழக்கிற்கு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் 2012-ம் ஆண்டு அவர் ராஜினாமா செய்தார்.

கடந்த 2013 பிப்ரவரி 28-ல் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் விசாரணையின்போது வழக்கை தாமதிக்க முயன்றதாக பவானி சிங்கிற்கு நீதிபதி டி'குன்ஹா ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கோரியபோது பவானி சிங் ஆட்சேபம் தெரிவிக் காததால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, 'அரசு வழக்கறிஞர் தனது பொறுப்பை உணர்ந்திருக்கிறாரா?'என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் பவானி சிங்கே அரசு வழக்கறிஞராக தொடர தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஜெயலலிதா மீதான வழக்கில் அவர் அரசு வழக்கறிஞராக தொடர்ந்தால் நீதி கிடைப்பது கேள்விக்குறி ஆகிவிடும் எனக் கூறி தேமுதிக, டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

திடீர் ராஜினாமா

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் பவானி சிங் மட்டும் வெளியே வராமல் நீண்ட நேரம் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக வழக்கறிஞர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலனை அழைத்து தனது ராஜினாமா கடிதத்தை பவானிசிங் அளித் துள்ளார்.

அதில், ''தொடர் வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக நான் மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலமாக தேவையில்லாத‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது. எனவே அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து இன்றுமுதல் விடுபடுகிறேன்''என குறிப்பிட் டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா வழக்கின் பொறுப் பாளரான வழக்கறிஞர் செந்திலிடமும் ஐஜி குணசீலன் தகவல் தெரி வித்தார்.

''வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்

ஜெயலலிதாவின் வழக்கறிஞருடன் ரகசிய பேச்சு

ராஜினாமா தகவலால் அதிர்ச்சி அடைந்த செந்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டு இருந்தார்.

திமுக தரப்பு நெருக்கடிகளை பொறுக்க முடியவில்லை. சுப்பிரமணியன் சுவாமியும் டிராபிக் ராமசாமியும் என்னை நீக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இவ்வளவு நெருக்கடியுடன் என்னால் அரசு வழக்கறிஞராக‌ தொடர‌ முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஒரு நாளைக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என பவானி சிங் கேள்வி எழுப்பியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலன் உள்ளிட்டோர் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை தனிமையில் சந்தித்து அரை மணி நேரம் பேசியதாகத் தெரிகிறது.

அப்போது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதாகவும் அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x