Published : 24 Jan 2015 03:56 PM
Last Updated : 24 Jan 2015 03:56 PM

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சௌமிதா டேயின் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வழங்கினார் ஜெயலலிதா

மேற்குவங்கத்தின் சார்பில் 10 ஆண்டுகள் பல ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்ற , 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய இளம் வீராங்கனை செல்வி செளமிதா டேயின் மருத்துவ சிகிச்சைக்காக, டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''1998 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் சார்பில் பல ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் கலந்து கொண்டவரும், 2010 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவருமான, 27 வயது இளம் வீராங்கனை செல்வி செளமிதா டே, மூளை மற்றும் நரம்பு தொடர்பான நோயால் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டு, கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது உடல்நிலைப் பற்றி விளக்கிய செளமிதா டே, 2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, மருத்துவமனையில் உரிய சிகிச்சை தரப்படவில்லை என்றும், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக, இப்பொழுது, தான் உடல் இயக்கமற்று உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிகிச்சைக்கு பணம் இன்றி, தங்கள் ஏழைக்குடும்பம் தவிப்பதாக செளமிதா டேயின் தாயார் கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஓர் எளிய குடும்பத்தின் பெருமைக்குரிய மகளாகிய செளமிதா டே, தேசிய அளவில் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர் என்றும், இன்னும் உலக அளவில் புகழ்பெறும் வாய்ப்பும், ஆற்றலும் அவருக்கு இருந்ததாகவும் இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலக்குறைவு மீளமுடியாததாக உள்ளது என்பதைப் பார்க்கும்போது, பெரிதும் வருந்துகிறேன்.

கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் விளையாட்டு வீராங்கனை செளமிதா டேயின் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x