Published : 01 Jan 2015 11:23 AM
Last Updated : 01 Jan 2015 11:23 AM

மகாராஷ்டிராவில் அவலம்: குடிநீருக்காக கிணற்றில் இறங்கும் குழந்தைகள் - பள்ளிக் கல்வி பாதிப்பு

பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கிவிடப்படும் அவலம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பீட் நகரத்தில் மரத்வாடா கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் வறட்சி நிலவுகிறது. அதன் காரணமாக நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் வெகு ஆழத்துக்குச் சென்றுவிட்டது.

சுமார் 60 அடிக்கும் மேலாக ஆழம் உள்ள இந்தக் கிணறுகளில் வாளிகளால் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. எனவே, வாளிகளை இணைத்துள்ள கயிறுகளின் மூலம் குழந்தை களை கிணற்றுக்குள் இறக்கி விடுகிறார்கள்.

கீழே இறங்கிய குழந்தைகள் சில கோப்பைகள் மூலம் தண்ணீரை வாளியில் நிரப்பி மேலே அனுப்புகிறார்கள்.

குழந்தைகள் செல்லும் அந்தக் கயிறு மிக மெல்லிய நைலான் கயிறு ஆகும். எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழலாம் என்ற நிலையில் இருக்கும் கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் பள்ளி செல்லும் குழந்தைகள் சாகசப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

இதுகுறித்து கிணற்றுக்குள் இறங்கும் சிறுமி ஒருவர் கூறும்போது, "இது கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் நிலைமை ஆகும். இந்தக் கிணறுதான் எங்கள் தண்ணீர் தேவைகளுக்கான ஒரே ஆதாரம் ஆகும். இந்தக் கிணற்றில் இறங்கி நீர் எடுப்பதற்காக நான் பல சமயம் பள்ளி வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டியிருக் கிறது" என்றார்.

மரத்வாடாவின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் 300 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. அதிகளவு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் எடுக்கப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டது என காரணம் கூறப்படுகிறது. இந்த பாதிப்பை குழந்தைகள்தான் சுமக்க வேண்டியுள்ளது.

இந்த மரத்வாடா கிராமம் மகாராஷ்டிர மாநில ஊரக மேம்பாட்டு அமைச்சர் பங்கஜா முண்டேவின் தொகுதி ஆகும். இங்கு கோடைக்காலங்களில் நிலவும் அதிகபட்ச வறட்சியைச் சமாளிக்க இதுவரை எந்தத் திட்டங்களும் தீட்டப்படவில்லை. இதுகுறித்து பங்கஜா முண்டே எந்த கருத்தும் கூறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x