

மத்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜெய்சங்கர் நியமனம் குறித்து, மத்திய அமைச்சர்களின் பணியமர்வு கேபினட் குழுவின் செயலாளரான பி.பி.சர்மாவின் சார்பில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்ட உத்தரவில், ‘சுஜாதா சிங், வெளியுறத் துறை செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக விலக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக 1977-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியான எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்படுகிறார். அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு அப்பதவி யில் நீடிப்பார்’ எனக் கூறப்பட்டுள்ளது.
சுஷ்மாவுக்கு விருப்பமில்லை
சுஜாதா சிங்குக்கு இன்னும் 7 மாத பதவிக்காலம் உள்ள நிலையில் அவர் கட்டாய ஓய்வு பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய வெளியுறத்துறை அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜின் மனதில் சுஜாதா சிங் தனி இடம் பிடித்தி ருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை திடீர் என பதவியில் இருந்து விலக்கியதை சுஷ்மா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறையின் மூன்றாவது பெண் செயலாளரான சுஜாதா சிங், அப்பதவியில் இருந்து ’கட்டாயமாக விலக்கப்படும்’ இரண் டாவது அதிகாரி ஆவார். இவருக்கு முன்பாக, ஏ.பி.வெங்கடேஷ்வரன் என்பவரை அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி நீக்கிவிட்டு, கே.பி.எஸ்.மேனன் என்பவரை வெளியுறவுத் துறை செயலாளராக நியமித்திருந்தார்.
மன்மோகன் விரும்பியவர்
சுஜாதா, ஆகஸ்ட் 2013-ல் பதவி ஏற்ற போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அப்பதவியில் ஜெய்சங்கரை நியமிக்க விரும்பிய தாகக் கூறப்படுகிறது. ஆனால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவரான முன்னாள் உத்தரப்பிரதேச ஆளுநர் டி.வி.ராஜேஷ்வரின் மகள் சுஜாதா என்பதால், சோனியா காந்தியின் வற்புறுத்தலின் பேரில் அவருக்கு அப்பதவி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திரா பிரதமராக இருந்த போது மத்திய உளவுத்துறை தலைவராக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஷ்வர் இருந்தார். ஜெய்சங்கர் நியமனம் குறித்து ‘தி இந்து’விடம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிரதமரானது முதல் மோடி, சுஜாதா சிங்கை பதவி மாற்றம் செய்ய முயற்சித்தார். இதற்காக, தானாகவே கவுரவமாக வெளியேறும் வகையில் அளிக்கப்பட்ட பல்வேறு வாய்ப்புகளை சுஜாதா ஏற்க வில்லை. புதிய செயலாளரான ஜெய் சங்கர், அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்தத்தில் முக்கிய பங்காற்றியவர். எனவேதான், மன்மோகனும் அவரை அப்பதவியில் அமர்த்த முயன்றார் என்றனர்.
மோடிக்கு உதவிய ஜெய்சங்கர்
மோடி பிரதமராகி அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ஜெய் சங்கர் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தார். அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரியான தேவ யானி கோப்ரகடே விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவு சற்று இறுக்கமாகி இருந்தது. அதை, தனது திறமை யான செயல்பாடுகளால் சமாளித்த துடன், மோடியையும் ஜெய்சங்கர் கவர்ந்தார். அதன்விளைவாகவே தற்போது வெளியுறவுத்துறை செய லாளராக அமர்த்தப்பட்டிருக்கிறார் ஜெய்சங்கர்.
இவரும் தமிழரே
வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி வந்த சுஜாதா சிங்கைப் போல், ஜெய்சங்கரும் தமிழர்தான். சுஜாதாவின் தந்தை டி.வி. ராஜேஷ்வர் சேலத்தைச் சேர்ந்தவர்.
பல்வேறு அரசுகளிடம் பாது காப்பு ஆலோசகராக பணியாற்றிய டாக்டர்.கே.சுப்பிரமணியம் என்ப வரின் மகன் ஜெய்சங்கர். கே. சுப்பிர மணியம் திருச்சியைச் சேர்ந்தவர். ஜப்பான், சிங்கப்பூர், செக் குடியரசு ஆகியவற்றுடன் சீனாவின் இந்திய தூதரகத்தில் நீண்ட காலம் பணியாற்றிய முதல் அதிகாரி ஜெய் சங்கர். கடந்த ஆட்சியில் இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையே எழுந்த எல்லைப் பிரச்சினையை திறமையுடன் கையாண்டதற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் பாராட்டப்பட்டவர். நாளை ஜெய்சங்கரின் 60-வது பிறந்த நாள். வெளியுறவுத்துறை செய லர் பதவியில் 60 வயதுக்கு மேற் பட்டவர்களை நியமிக்க முடியாது என்பதால், ஜெய்சங்கர் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெய்சங்கரின் மனைவி ஜப்பானைச் சேர்ந்தவர். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
சுஜாதா நீக்கத்தில் உள்நோக்கம் இல்லை பாஜக விளக்கம்
புதுடெல்லி
வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த சுஜாதா சிங் நீக்கப்பட்டது அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையா என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என பாஜக பதில் அளித்துள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மணிஷ் திவாரி, “அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றிய தேவயானி கோப் ரகடே விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக இருந்ததற்காக சுஜாதா சிங் பதவியில் இருந்து விலக்கப்பட்டாரா. இந்தியாவிலிருந்து அமெரிக்க அதிபர் திரும்பிய உடனேயே இம்மாற்றம் நிகழ்ந்திருப்பது தற்செயலாகவா” என கேள்வியெழுப்பியுள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளரான நளினி கொஹிலி செய்தியாளர்களிடம் இதுதொடர்பாகக் கூறியதாவது:
இந்த விஷயத்தில் பிரச்சினை கிளப்புவதற்கு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு பதவிக்கு எந்த அதிகாரியை நியமிப்பது மற்றும் அவருக்கு என்ன பொறுப்பு அளிப்பது என்பதில் மத்திய அரசு தனது வரம்புகளுக்கு உட்பட்டு செயல்பட்டுள்ளது. இதுபோல் ஒரு முடிவை அரசு எடுப்பது இது முதன் முறையல்ல, இதற்கு முன்பும் பல முன் உதாரணங்கள் உள்ளன. இது அரசின் உரிமையே தவிர, எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.