உத்தரகண்ட் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முதல்வரின் மனைவி, முன்னாள் முதல்வரின் மகன்

உத்தரகண்ட் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முதல்வரின் மனைவி, முன்னாள் முதல்வரின் மகன்
Updated on
1 min read

உத்தரகண்ட் மாநிலத்தில், 2 எம்.பி. தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை புதன்கிழமை அறிவித்தது. இதில், முதல்வரின் மனைவி, முன்னாள் முதல்வரின் மகன் மற்றும் மாநில அமைச்சர் ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

இம்மாநிலத்தின் ஹரித்துவார் தொகுதி வேட்பாளராக, முதல்வர் ஹரீஷ் ராவத்தின் மனைவி ரேணுகா ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக சார்பில் இங்கு போட்டியிடும் முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்கை எதிர்கொள்கிறார். இங்கு கடந்த 2009 தேர்தலில் ஹரீஷ் ராவத் வெற்றி பெற்றார். ரேணுகா ராவத் கடந்த தேர்தலில் வெறொரு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோற்றார்.

உத்தரகண்டின் தெஹரி கர்வால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக, முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவின் மகன் சாக்கேத் பகுகுணா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக வேட்பாளரான, முன்னாள் முதல்வர் புவன் சந்திரா கந்தூரியை எதிர்கொள்கிறார். இங்கு எம்.பி.யாக இருந்த விஜய் பகுகுணா, 2012-ல் உத்தரகண்ட் முதல்வராக பொறுப்பேற்ற பின் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகன் சாக்கேத் முதன் முறையாக போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் மாலா ராஜ்யலஷ்மியிடம் தோல்வியுற்ற சாக்கேத், தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

காங்கிரஸின் மூன்றாவது வேட்பாளராக பவ்ரி கர்வால் தொகுதிக்கு ஹராக்சிங் ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தர கண்ட் மாநில மூத்த அமைச்சரான இவர், பாஜக வேட்பாளர் சத்பால் மஹராரஜை எதிர்கொள்கிறார். சத்பால் இதற்கு முன் காங்கிரஸ் சார்பில் பவ்ரி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in