

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக சசி தரூரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை மேற்கொள்ளப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவர் சசி தரூரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ளும்.
தற்போது சசி தரூர் டெல்லியில் இல்லை. அவர் இன்று மாலை திரும்புகிறார். நாளை அல்லது நாளை மறுநாள் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.
2013 ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில் டெல்லி போலீஸார் மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு சுனந்தா வழக்கு விசாரணை வேகம் பெற்றது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸார் புதிய வழக்கு பதிவு செய்தனர்.