

ஜம்முவின் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படை யினர் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் ஜம்முவில் நேற்று கூறிய தாவது:
ஜம்மு மாவட்டம், ஆர்னியா, ஆர்.எஸ்.புரா சப்-செக்டார் சர்வ தேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் படை யினர் வியாழக்கிழமை இரவு கடும் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி யால் சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் இத்தாக்குதல் நடத்தப் பட்டது. இதையடுத்து பி.எஸ்.எப். வீரர்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். நேற்று அதி காலை 2.30 மணி வரை இருதரப்பு மோதல் நீடித்தது.
எல்லை நகரான ஆர்னியாவி லும் பீரங்கி குண்டுகள் விழுந்தன. இதில் 3 பேர் காயமடைந்தனர். எல்லைப் பகுதிகளிலிருந்து இதுவரை மக்கள் யாரும் வெளியேறவில்லை. அங்கு நிலை மையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங் களுக்கு மாற்றுவோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து எல்லை கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு பீதி பரவியது. பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியதும் விளக்குகளை அணைத்து விட்டு மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்த தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் 6 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.