விசாரணை அதிகாரி திடீர் இடமாற்றம்: ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மேக்தி ஆள் சேர்க்கவில்லை என தகவல்

விசாரணை அதிகாரி திடீர் இடமாற்றம்: ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மேக்தி ஆள் சேர்க்கவில்லை என தகவல்
Updated on
1 min read

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக பெங்களூருவில் கைதான மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பல்கர் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

பெங்களூருவை சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆள் சேர்த்ததாக பெங்களூரு போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பெங்களூரு குற்றப்பிரிவு இணை ஆணையர் ஹேமந்த் நிம்பல்கர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த 20 நாட்களாக மேக்தியை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு, பண பரிமாற்றம், ஆள் சேர்ப்பு, வன்முறையில் ஈடுபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு போலீஸார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே போலீஸ் காவல் முடிந்து மேக்தி நேற்று பெங்களூரு மாநகர 9-வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேக்தியின் போலீஸ் காவலை நீட்டிக்குமாறு கோரவில்லை. இதனால் மேக்திக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேக்தியை கைது செய்து விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரியும் பெங்களூரு குற்றப்பிரிவு இணை ஆணையருமான‌ ஹேமந்த் நிம்பல்கர் நேற்று மாலை திடீரென‌ இடமாற்றம் செய்யப்பட்டார். மேக்தி வழக்கை அவர் சரியாக விசாரிக்கவில்லை என்பதால் அவர் அதிரடியாக தீயணைப்பு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தங்களுடைய மகன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக மேக்தியின் பெற்றோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in