

சத்திஸ்கர் மாநிலத்தின் பிலாயில் அரசு மருத்துவர் ஒருவரும் 2 கான்ஸ்டபிள்களும் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
6 மாதங்களுக்கு மேலாக 20 வயது பெண் ஒருவரை இவர்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிலாய் கோயில் ஒன்றில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மிகவும் மோசமான நிலையில் இருந்ததை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்ததாக காவல்துறை உயரதிகாரி பிரதீப் குப்தா தெரிவித்தார்.
"பெண் ஒருவர் மோசமான நிலைமையில் கோயிலில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்ததையடுத்து கோயிலுக்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணை விசாரித்ததில் இந்த பலாத்கார விவகாரம் வெளிவந்துள்ளது” என்று உயரதிகாரி பிரதீப் குப்தா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்தார்.
ஜூன் 19, 2014-இல் இந்தப் பெண் பிலாய் அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலை நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
“மருத்துவர் இவருக்கு சில மயக்க மருந்துகளைக் கொடுத்து மருத்துவமனையின் தரைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு 2 போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் டாக்டர் இவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.” என்று பிரதீப் குப்தா தெரிவித்தார்.
தனக்கு நேர்ந்ததை மிரட்டல் காரணமாக அந்தப் பெண் போலீஸிடமோ, தன் பெற்றோரிடமோ தெரிவிக்கவில்லை. அதாவது, விஷயத்தை வெளியே சொன்னால், படம் பிடித்து வைத்துள்ளோம் என்றும் அதனை வெளியிட்டு விடுவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
மீண்டும் டிசம்பர் மாதம் இந்தப் பெண்ணை இந்த 3 பேரும் தங்கள் இச்சைக்கு வலுக்கட்டாயமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதனையடுத்து இவர் கர்ப்பமானார். ஆனால், அந்த அரசு மருத்துவர் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கலைக்க வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து மிகுந்த மனவேதனை, விரக்தியில் அந்தப் பெண் இருந்ததாகவும், நல்ல பயிற்சி பெற்ற பெண் போலீஸாரை நியமித்து அவரைத் தேற்றி உண்மையைக் கூற வைத்ததாகவும் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.
அடாவடியில் ஈடுபட்ட கான்ஸ்டபிள்கள் சவுரவ் பாக்தா, சந்திரபிரகாஷ் பாண்டே மற்றும் மருத்துவர் கவுதன் பண்டிட் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 376-ஆம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.