

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீர் மாநிலம் கத்துவா, சம்பா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லை கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்ததாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
9 நாட்களில் 8 தாக்குதல்
கடந்த 9 நாட்களில் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 8 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவும் பாகிஸ்தான் ராணுவம் சம்பா, கத்துவா பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. சிறிய ரக பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் இருவர் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் எல்லை கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர். அதிகாலை மூன்று மணி வரை இருதரப்பினரிடையேயும் சண்டை நீடித்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கத்துவா மாவட்டம் நச்சாக் கிராமத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். 300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தங்க வைப்பதற்காக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சம்பா பகுதியில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இதற்கிடையில், சோர்காலி பகுதி வழியாக நடைபெறவிருந்த மிகப்பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படை சாமர்தியமாக தடுத்து நிறுத்தியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்ட எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் கே.பதக் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் ஊடுருவ உதவுவதற்காகவே, திசை திருப்பும் முயற்சியாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.