

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 4 நாட்களாக பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். நேற்று வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 1, 2 ஆகியவற்றில் உள்ள மொத்தம் 42 அறைகளும் நிரம்பியிருந்தன. இந்த காம்ப்ளக்ஸுக்கு வெளியே பக்தர்கள் 1 கி.மீ. தூரம் வரை வரிசையில் காத்திருந்தனர். சர்வ தரிசனத்துக்கு 25 மணி நேரமானது. திவ்ய தரிசனத்துக்கு 15 மணி நேரமும், சிறப்பு தரிசனத்துக்கு (ரூ. 300 கட்டணம்) 3 மணி நேரமும் ஆனது.
ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருவ தால், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கூட்டத்தை சமாளிக்க திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
பக்தர்கள் தங்குவதற்காக கூடுத லாக 11 இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சிற்றுண்டி, பால் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நாளை முதல் ஜனவரி 4-ம் தேதி வரை திவ்ய தரிசனமும், 30-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் ஜனவரி 1-ம் தேதி தங்க ரதத்தில் உற்சவரின் திருவீதி உலா நடைபெற உள்ளது. மறுநாள் துவாதசியன்று சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.